பால்கனி அறை சர்ச்சை: உண்மையை சொன்ன சின்ன தல சுரேஷ் ரெய்னா… நடந்தது என்ன..?

சென்னை,

கொரோனா பரவல் காரணமாக 2020-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இங்கு செல்வதற்கு முன்பாகவே ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கும் வீரர்கள் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அழைத்து செல்லப்பட்டனர். அப்போது சி.எஸ்.கே. அணிக்காக விளையாடிய சுரேஷ் ரெய்னா, 15 நாட்கள் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டு அணியினருடன் பயணம் மேற்கொண்டார்.

ஆனால் திடீரென ஐ.பி.எல். தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே சொந்த ஊர் திரும்பினார். இதற்கு சி.எஸ்.கே. அணி நிர்வாகம் சுரேஷ் ரெய்னாவிற்கு பால்கனி அறை கொடுக்காததே காரணம் என்று கூறப்பட்டது. இந்த விவகாரம் குறித்து சி.எஸ்.கே. வீரர்கள் யாரும் இதுவரை பொதுவெளியில் பேசியதில்லை. இதன்பின் 2022-ம் ஆண்டு மெகா ஏலத்தின்போது சுரேஷ் ரெய்னா சி.எஸ்.கே. அணியால் வாங்கப்படவில்லை. இதனால் ரசிகர்கள் பலரும் பால்கனி சர்ச்சை உண்மையென்றே கருதி வந்தனர்.

இந்நிலையில் இந்த சர்ச்சை தொடர்பாக சுரேஷ் ரெய்னா பேசுகையில், 2020-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரின்போது எனது உறவினர்கள் சிலர் கொலை செய்யப்பட்டார்கள். பதான்கோட்டில் என்னுடைய உறவினரின் மொத்த குடும்பமும் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டனர். இதனால் எனது தந்தை மற்றும் குடும்பத்தினர் சோகத்தில் இருந்தனர். அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் ஊர் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதுகுறித்து தோனி மற்றும் சி.எஸ்.கே. நிர்வாகத்திடம் கூறினேன்.

குடும்பத்தினரே முக்கியம் என்பதால், நான் உடனடியாக திரும்பினேன். அந்த சீசனில் நான் மீண்டும் அணிக்கு திரும்பவில்லை. ஏனென்றால் அந்த சீசனில் மீண்டும் சி.எஸ்.கே. அணியுடன் இணைய வேண்டுமென்றால் கிட்டத்தட்ட 30 நாட்கள் ஹோட்டலில் தனியறையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன் காரணமாகவே மீண்டும் ஐக்கிய அரபு அமீரகம் பயணிக்காமல் இங்கு இருந்தேன். அதனை சி.எஸ்.கே. அணி நிர்வாகமும் புரிந்து கொண்டனர். அதன்பின் 2021-ம் ஆண்டு சீசனில் அனைவரும் இணைந்து விளையாடி கோப்பையை வென்றோம். அதற்கு பிறகு நான் மீண்டும் சி.எஸ்.கே. அணியுடன் இணைய முடியாமல் போனது” என்று தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.