தமிழகம் முழுவதும் பொது இடங்களில் உள்ள கொடி கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற காட்சிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு

மதுரை: ‘தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும்’ என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை விளாங்குடியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சித்தன், மாடக்குளம் கதிரவன் ஆகியோர் அதிமுக கொடிக் கம்பம் அமைக்க அனுமதி வழங்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி இளந்திரையன் நேற்று உத்தரவு பிறப்பித்தார். அதில் கூறியிருப்பதாவது:

சாலைகளிலும், தெருக்களிலும் பொது இடத்தை ஆக்கிரமித்து கட்சிக் கொடிக் கம்பங்கள் நடப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், சாலையை பயன்படுத்துவோருக்கு பல்வேறு சிரமங்களும் ஏற்படுகின்றன. கட்சித் தலைவர்கள், சமுதாயத் தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாளின்போது கொடிக் கம்பம் அமைந்துள்ள பகுதி முழுவதுமாக ஆக்கிரமிக்கப்படுகிறது.

யார் எவ்வளவு உயரத்தில் கொடிக் கம்பங்கள் அமைப்பது என்பதில் அரசியல் கட்சிகளிடம் போட்டிகள் ஏற்படுகின்றன. பொது இடங்கள், உள்ளாட்சி இடங்கள், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் நிரந்தரமாக கட்சிக் கொடிக் கம்பங்கள் அமைக்க எந்த சட்டத்திலும் அனுமதி, உரிமம் வழங்கவில்லை. நிரந்தரமாக கட்சிக் கொடிக் கம்பங்கள் அமைக்க தடையில்லா சான்றிதழ் வழங்க போலீஸாருக்கும், வருவாய்த் துறையினருக்கும் அதிகாரம் இல்லை.

எனவே தமிழகத்தில் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சி, சமுதாய அமைப்புகளின் நிரந்தர கட்சிக் கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும். தவறினால் சம்பந்தப்பட்ட கட்சிக்கு நோட்டீஸ் அளித்து அடுத்த 2 வாரங்களில் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும். இதற்கான செலவுகளை சம்பந்தப்பட்ட கட்சி அல்லது அமைப்பிடம் வசூலிக்க வேண்டும்.

அனுமதி வழங்கக் கூடாது: அரசியல் கட்சி மற்றும் அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் நிரந்தரமாக கட்சி கொடிக் கம்பங்கள் அமைக்க எந்த அதிகாரியும் அனுமதி வழங்கக் கூடாது. அரசியல் கட்சியினர், சமுதாயம் மற்றும் மத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முறையாக அனுமதி பெற்று அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் கொடிக் கம்பங்களை வைக்கலாம். தனியார் இடங்களில் கொடிக் கம்பங்கள் அமைப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.

பிரச்சாரம், பொதுக்கூட்டம், தர்ணா மற்றும் கூட்டங்களின்போது பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் தற்காலிகமாக கொடிக் கம்பங்கள் நடலாம். இதற்கு முன்கூட்டியே வாடகை வசூலித்துக்கொண்டு அதிகாரிகள் அனுமதி வழங்கலாம். அனுமதி காலம் முடிந்த பின்னர் தற்காலிகக் கொடிக் கம்பங்கள் அகற்றப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

கொடிக் கம்பங்கள் நடப்பட்ட இடம் சுத்தம் செய்யப்பட்டு, அதற்காக தோண்டிய குழிகள் மூடப்பட்டு பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டு இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துகொள்ள வேண்டும். இதில் பாதிப்பு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அபராதம் வசூலிக்க வேண்டும்.

அறிக்கை தரவேண்டும்: இந்த உத்தரவு நகலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உயர் நீதிமன்ற பதிவுத்துறை அனுப்ப வேண்டும். இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தில் தமிழக தலைமைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.