மத்தியப் பிரதேசத்தில் நோயாளி ஒருவரைப் படுக்கையில் கை, கால்களைக் கட்டி கோமா நிலையில் இருப்பதாகக் கூறி உறவினர்களிடம் பணம் வசூலித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரத்லம் ஜி.டி மருத்துவமனையில் பண்டி நிமாமா என்பவர் சிகிச்சைக்காக வந்தார். அவர் சிகிச்சையின்போது கோமா நிலைக்குச் சென்றுவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பண்டி தனது உடம்பில் பொருத்தப்பட்டு இருந்த செயற்கை சுவாசக் கருவிகளோடு மருத்துவமனைக்கு வெளியில் வந்தார்.

அவர் தன்னை மருத்துவமனை நிர்வாகம் கை, கால்களைப் படுக்கையில் கட்டி வைத்து, தான் கோமா நிலையில் இருப்பதாகக் கூறி பணம் சம்பாதித்ததாகக் குற்றம் சாட்டினார். அவர் மருத்துவமனைக்கு வெளியில் நின்று கொண்டு போராடினார். இதனால் அங்கு நோயாளியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கூடினர்.
இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பண்டி பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சண்டையிட்டதில் காயம் அடைந்து ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு அங்கிருந்து ஜி.டி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
அவர் மருத்துவ உபகரணங்களுடன் மருத்துவமனைக்கு வெளியில் நின்று போராட்டம் நடத்தியது சோசியல் மீடியாவில் வைரலானது. இதையடுத்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டு இருக்கிறார். மூன்று பேர் கொண்ட விசாரணைக்குழு சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் ஆய்வு செய்து விசாரணை நடத்தியது. இதில் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் வாக்குமூலம் பெறப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மருத்துவமனை நிர்வாகம் அவசர சிகிச்சைப் பிரிவில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் பண்டி மருத்துவர்களிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டிருப்பதும், மருத்துவர்களைத் திட்டி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து பண்டியின் மனைவி லட்சுமி கூறுகையில், “எனது கணவரின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அவர் கோமாவில் இருப்பதாகவும் தெரிவித்தனர். முன்பணமாக ஒரு லட்சம் கட்டும்படி கூறினர். நான் பணத்தை ஏற்பாடு செய்து கொண்டு வந்தபோது, எனது கணவரின் கைகள் படுக்கையில் கட்டப்பட்டு இருந்தது. அவரது கழுத்தை மருத்துவர்கள் பிடித்து அழுத்திக்கொண்டிருந்தனர். அவர் சுய நினைவு இல்லாமல் இருந்ததால் தண்ணீர் கொடுப்பதாக நினைத்தேன். ஆனால் தான் சுயநினைவோடு இருப்பதாக எனது கணவர் என்னிடம் தெரிவித்தார். அதனை மருத்துவர்கள் நம்ப மறுத்தனர்” என்றார்.
இது குறித்து பண்டி கூறுகையில், ”எனக்குச் சுயநினைவு வந்ததும் எனது குடும்பத்தினரைப் பார்க்க வேண்டும் என்று கூறினேன். ஆனால் மருத்துவர் வந்து அமைதியாக இருக்கும்படி கூறினார். எனது கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு இருந்தது” என்று கூறினார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
