தெலங்கானாவில் ஸ்ரீசைலம் இடது தண்ணீர் கால்வாய் திட்டத்துக்காக எஸ்எல்பிசி சுரங்கம் தோண்டப்பட்டது. ஸ்ரீ சைலம் முதல் நல்கொண்டா வரையிலான இந்த கால்வாய் திட்டத்தில் 14 கி.மீ. தொலைவுக்கு சுரங்கம் தோண்டப்பட்டது. கடந்த 15 நாட்களுக்கு முன் சுரங்கத்தின் மேற்கூரை திடீரென சரிந்து 8 தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கினர்.
இவர்களை மீட்க ராணுவம், பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்பு படை மற்றும் போலீஸார் என 9 படைகளின் வீரர்கள் இரவும், பகலுமாக போராடி வருகின்றனர். ரேடார் கருவிகள், ட்ரோன்கள் உபயோகப்படுத்தப்பட்டன. 13.85 கி.மீட்டர் தொலைவு வரை உள்ள சுரங்கப்பாதையில் 13.61 கி.மீ. வரை மீட்புப் படை வீரர்கள் முன்னேறி உள்ளனர். வழி நெடுகிலும் சேறும் சகதியுமாக உள்ளது.
ஜிபிஆர் கருவி மூலம் ஸ்கேன் செய்ததில் ஓர் இடத்தில் 4 தொழிலாளர்கள், மற்றொரு இடத்தில் மேலும் 4 தொழிலாளர்களின் சடலங்கள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. ஆனால், சடலங்களை இதுவரை மீட்க முடியவில்லை. சுரங்கத்துக்குள் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மீட்புப் பணியில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.
சுரங்கத்துக்குள் புதிய கன்வேயர் பெல்ட்டை செலுத்தி சேறு, சகதியை விரைவாக வெளியேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சூழலில் 110 தொழிலாளர்கள் போதிய உபகரணங்களுடன் நேற்று சுரங்கத்துக்குள் சென்றனர். தங்களுடன் பணியாற்றிய 8 பேரின் சடலங்களை எப்படியாவது மீட்போம் என்று அவர்கள் உறுதிப்பட தெரிவித்துள்ளனர். அவர்கள் நேற்று முதல் அதிதீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.