நலத் திட்டங்களைப் பட்டியலிட்டு முதல்வர் ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து

சென்னை: ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை முதல் புதுமைப் பெண் திட்டம் வரை தமிழக அரசின் பெண்களுக்கான நலத் திட்டங்களைப் பட்டியலிட்டு முதல்வர் ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் முதல்வர் பேசியிருப்பதாவது: வணக்கம். நலமா? மாதந்தோறும் 1 கோடியே 16 லட்சம் சகோதரிகள் ரூ.1000 உரிமைத் தொகை பெறுகிறார்கள். தாய்வீட்டு சீர் மாதிரி எங்கள் அண்ணன் ஸ்டாலின் தரும் மாதாந்திர சீர் என்று எந்நேரமும் தமிழ் சகோதரிகள் மனம்மகிழ சொல்றாங்க. அது தான் விடியலின் ஆட்சி.

ஆட்சிப் பொறுப்பேற்றதும் நான் இட்ட முதல் கையெழுத்தே மகளிருக்கான கட்டணமில்லா விடியல் பயணத் திட்டத்துக்கு தான். இந்த விடியல் பயணமானது.மகளிரின் சேமிப்பை அதிகரித்துள்ளது.

அரசுப் பள்ளியில் படித்த பெண் பிள்ளைகள் பலர் கல்லூரிக்குச் செல்ல முடியாத நிலையை மாற்றி உயர்கல்வியைப் பயில உருவாக்கப்பட்ட திட்டம் தான் புதுமைப்பெண் திட்டம். தமிழ்நாடு மாணவ, மாணவிகள் என்னை அப்பா, அப்பா என்று வாய் நிறைய அழைக்கும்போது அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் பாச உணர்வுதான் முக்கியம். அன்புச் சகோதரிகள் அனைவருக்கும் உலக மகளிர்தின வாழ்த்துகள். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழக அரசின் சார்பில் பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

அதன்படி சமூக நலத்துறை மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை சார்பில் கடந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட மகளிர் ‘பிங்க் ஆட்டோ’ திட்டத்தை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் ‘உலக மகளிர் தின விழா’ நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.