அவுரங்கசீப் கல்லறையை பாதுகாக்கக் கோரி முகலாயப் பேரரசின் வாரிசு ஐ.நா. சபைக்கு கடிதம்!

புதுடெல்லி: கடைசி முகலாய பேரரசர் பகதூர் ஷா ஜாபரின் வாரிசு எனத் தன்னை கூறிக்கொள்ளும் நபர், சம்பாஜி நகரில் உள்ள அவுரங்சீப்பின் கல்லறையைப் பாதுகாக்கக் கோரி ஐக்கிய நாடுகள் சபைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் சத்ரபதி சம்பாஜி மாவட்டத்தின் குல்தாபாத்தில் அமைந்துள்ள அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்றக்கோரி நாக்பூரில் நடந்த பேரணியில் வன்முறை ஏற்பட்ட ஒரு மாதம் கழித்து இந்த கோரிக்கை எழுந்துள்ளது.

முகலாய பேரரசரின் கல்லறை அமைந்துள்ள வக்பு சொத்தின் முத்தவல்லி (பராமரிப்பாளர்) எனக் கூறிக்கொள்ளும் யாகூப் ஹபீபுத்தீன் டூசி, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேஸுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் யாகூப், “இந்தக் கல்லறை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இது பண்டைய நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம் 1958 -ன் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தின்படி, பாதுகாக்கப்பட்ட இந்த நினைவுச்சின்னத்தின் அருகில் அங்கீகரிக்கப்படாத கட்டிடங்கள், மாற்றங்கள் செய்தல், அதனை அழித்தல் தோண்டுதல் போன்றவைகளை மேற்கொள்ள முடியாது. அவ்வாறு எதாவது நிகழ்ந்தால் அது சட்டப்படிக் குற்றமாகவும், தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்படும்.

தற்போது திரைப்படம், ஊடகம் மற்றும் சமூக வலைதளம் மூலமாக வரலாற்றின் பிரிவுகள் தவறாக சித்தரிக்கப்பட்டு மக்களின் உணர்வுகள் தூண்டிவிடப்படுகின்றன. இதனால் தேவையற்ற போராட்டங்கள், வெறுப்பு பிரச்சாரங்கள், மற்றும் உருவ பொம்மைகளை எரித்தல் போன்ற அடையாள எதிர்ப்பு நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.

இப்போது இருக்கும் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்களுக்காக இந்தப் பாரம்பரியச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். அத்தகைய நினைவுச் சின்னங்கள் அழித்தல், சேதப்படுத்துதல் மற்றும் சட்டவிரோதமாக மாற்றியமைத்தல் போன்றவை சர்வதேச கடமைகளை மீறுவதாகும். கடந்த 1972-ம் ஆண்டு நடந்த உலகக் கலாச்சாரம் மற்றும் இயற்கை பாரம்பரியத்தை பாதுகாப்பது தொடர்பான யுனஸ்கோ மாநாட்டில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது.

இந்த விஷயங்களைக் கவனத்தில் கொண்டு, அவுரங்கசீப்பின் கல்லைறைக்கு தேசிய மற்றும் சர்வதேச சட்டங்களின்படி பாதுகாப்பு வழங்கும்படி, மத்திய அரசு மற்றும் இந்திய தொல்பொருள் துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு யாகூப் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.