சென்னை: ‘‘புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ள முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களின் சிகிச்சைக்காக வழங்கப்பட்டு வரும் மாதாந்திர புற்றுநோய் நிவாரண நிதி ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்’’ என, சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவித்தார்.
தமிழக சட்டப் பேரவையில், பொதுத் துறை மானியக் கோரிக்கையில் முன்னாள் படை வீரர் நலன் தொடர்பான விவாதத்துக்கு பதில் அளித்து, அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசியதாவது: தமிழகத்தில் 1.24 லட்சம் முன்னாள் படை வீரர்களும், 57,921கைம் பெண்களும் வசித்து வருகின்றனர். அவர்களுடைய மறுவாழ்வுக்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, 2024-25-ம் ஆண்டில் வீர தீர செயல்களில் பதக்கம் பெற்ற 25பேருக்கு ரூ.13.42 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
போர் மற்றும் போர் ஒத்த நடவடிக்கைகளால் உயிரிழந்த, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட படை வீரர்களின் குடும்பத்துக்கு வருடாந்திர பராமரிப்பு மானியமாக, இவ்வாண்டு 482 பேருக்கு ரூ.1.20 கோடி வழங்கப்பட்டுள்ளது. மாதாந்திர நிதியுதவி, கல்வி உதவித் தொகை மற்றும் மருத்துவ நிதியுதவி ஆகியவற்றுக்கு 15,702 பேருக்கு ரூ.37.15 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமது ஒரே மகன் அல்லது ஒரே மகளை படைப் பணிக்கு அனுப்பிய பெற்றோரையும், ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகளை படைப் பணிக்கு அனுப்பிய பெற்றோரையும் கவுரவிக்கும் வகையில் ரூ.20 ஆயிரம் மற்றும் ரூ.25 ஆயிரம் வழங்கப்படுவதுடன், வெள்ளிப் பதக்கமும் அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டில் 89 பேருக்கு ரூ.21.37 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் படை வீரர்கள் ராணுவ பணியில் சேரும் போது முப்படையில் நிரந்தர படை துறை அலுவலர் பணிக்கு ரூ.1 லட்சமும், குறுகிய கால படைத் துறை அலுவலர் பணிக்கு ரூ.50 ஆயிரமும், ராணுவத்தில் இளநிலை படை அலுவலர் மற்றும் இதர பணிக்கு ரூ.25 ஆயிரமும் தொகுப்பு மானியமாக வழங்கப்படுகிறது.
முன்னாள் ராணுவத்தினர் பயன்பெறும் வகையில், ரூ.7 கோடி மதிப்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் 205 முன்னாள் படை வீரர்களுக்கும், 2-ம் கட்டமாக 12 மாவட்டங்களில் 284 படை வீரர்களுக்கும் பல்வேறு விதமான திறன்மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வரப்படுகிறது.
அறிவிப்புகள்: புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ள முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களின் சிகிச்சைக்காக வழங்கப்பட்டு வரும் மாதாந்திர புற்றுநோய் நிவாரண நிதி ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். முன்னாள் படை வீரர்களின் கைம்பெண்கள் ஈமச்சடங்குக்காக வழங்கப்பட்டு வரும் ஈமச்சடங்கு நிதியுதவி ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இவ்வாறு கயல்விழி செல்வராஜ் கூறினார்.