திருநெல்வேலி: “பிரதமர் மோடி 140 கோடி இந்தியர்களின் சிகரம். ஆபரேஷன் சிந்தூரை வரவேற்கிறேன். வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் 2026 தேர்தலில் தமிழகத்தில் நடத்தப்படும்,” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
திருநெல்வேலியில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “இந்தியா சுதந்திரமடைந்தபோது ஏற்பட்ட சந்தோஷத்தைவிட, இன்று அடைந்த சந்தோஷம் மிகவும் மகிழ்ச்சியான நாளாக அமைந்துள்ளது. காஷ்மீர் பயங்கரவாத சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியர்களின் ஆன்மா சாந்தி அடையும். பிரதமர் மோடி தனி நபர் அல்ல, 140 கோடி இந்தியர்களின் சிகரமாக விளங்குகிறார்.
9 இடங்களில் உள்ள தீவிரவாதிகளின் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு தமிழக பாஜக சார்பில் பிரதமர் மோடிக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் முதல்வராக இருக்கக்கூடிய ரேவந்த் ரெட்டி, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று கூறியதற்காகவும், தேச ஒற்றுமை பிரச்சினை குறித்து தமிழக முதல்வர் வரவேற்று பேசியதற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட எந்த கட்சியாக இருந்தாலும் தேச உணர்வு இருக்க வேண்டும். வரும் 2026 தமிழக சட்டப் பேரவை தேர்தலில் வெற்றிவேல் வீரவேல் எனும் ஆபரேஷனை தொடங்குவோம். பாஜக கூட்டணிக்கு வருமாறு திருமாவளவனுக்கு நான் அழைப்பு விடுக்கவில்லை. அவர் என்னுடைய நெருங்கிய நண்பர். மற்றவர்கள் யாரும் பேசினார்களா? என்று தெரியவில்லை. நீட் தேர்வு எழுதும் மாணவிகளை தலைவிரி கோலமாக அனுப்புவது தேவையில்லாத ஒன்று,” என்று தெரிவித்தார்.
‘ஒய்’ பிரிவு பாதுகாப்புக்கு கேட்டுள்ளீர்களா? என்ற கேள்விக்கு, “நான் தமிழக முதல்வரை பெரிதும் மதிக்கிறேன். நயினார் நாகேந்திரனுக்கு எதற்கு பாதுகாப்பு. அவர் தான் எல்லோருக்கும் பாதுகாப்பு வழங்க கூடியவர் என நினைத்திருக்கலாம். மேலும் மத்திய அரசால் வழங்கப்படும் ‘ஒய்’பிரிவு பாதுகாப்பு தனக்கு தேவையில்லை,” என்றும் தெரிவித்தார்.