மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி. இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் வெற்றியை பெற்று தந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற பின்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அதேசமயம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவோம் எனவும் கூறினர்.
இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா கடந்த 7ம் தேதியும், விராட் கோலி நேற்றும் அறிவித்தனர். இந்த முடிவு அவர்களது ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருவரும் விளையாடுவர்கள் என எதிர்பார்த்த வேளையில் இருவரும் அடுத்தடுத்து ஓய்வு முடிவை அறிவித்து அதிர்ச்சி அளித்தனர்.
இந்த சூழ்நிலையில் இவர்களது ஓய்வு முடிவுகளை வைத்து பார்க்கும் போது இவர்கள் இருவரும் இரண்டு ஆண்டுகள் கழித்து நடைபெற உள்ள 2027 ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் விளையாட மாட்டார்கள் என இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேசியிருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் மிகப்பெரிய சாதனையாளர்களாக இருந்து வருகின்றனர். மீண்டும் தேர்வுக்குழு 2027-ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை அணி குறித்து பரிசீலிக்கும். 2027-ம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் இடம் பெற முடியுமா?, அப்படி இடம் பெற்றால் இவர்களால் சிறப்பாக செயல்பட முடியுமா? என்பது குறித்து நிச்சயமாக பரிசீலனை செய்யும். தேர்வுக்குழு ‘ஆம்’ என்று நினைத்தால் இவர்கள் இருவரும் தயாராக இருப்பார்கள்.
ஆனால், நேர்மையாக கூறினால் இவர்கள் இருவரும் விளையாடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. நான் மிகவும் நேர்மையாக சொல்கிறேன். ஆனால் இது குறித்து யாருக்கு தெரியும். அடுத்த ஒரு வருடத்தில் அல்லது அதற்கு மேல் இவர்கள் இருவரும் சிறப்பான பார்மில் இருந்தால், அதற்கு மேல் சதங்கள் அடித்துக் கொண்டே இருந்தால், கடவுளால் கூட இவர்கள் இருவரையும் கைவிட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.