சென்னை: சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நோயாளிகள் சிரமப்படாமல் இருக்க கூடுதலாக மருந்து கவுன்ட்டர்கள் இன்று திறக்கப்படுகிறது என்று மருத்துவமனை இயக்குநர் ஆர்.மணி தெரிவித்தார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை மருந்தகத்தில் மருந்து வாங்குவதற்காக பெரிய வரிசை இருப்பதை அரசு விரும்புகிறதா? என்று ஒரு செய்தி சமூக வலைதளத்தில் நேற்று பரவியது. தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்திருந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அந்த செய்தியை பார்த்தவுடன் மருத்துவமனை இயக்குநர் ஆர்.மணியை தொலைபேசியில் அழைத்து இச்செய்தி குறித்து விசாரிக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, இயக்குநர் உடனே மருத்துவமனை மருந்தகத்தில் பெரிய வரிசையில் நிற்கும் நோயாளிகளுக்கு அதிக வரிசை ஏற்படுத்தி கூட்ட நெரிசலை சீர் செய்தார்.
இதுதொடர்பாக மருத்துவமனை இயக்குநர் ஆர்.மணி கூறியதாவது: இந்த கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம், தற்போது அரசு மருத்துவமனையை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துவதே ஆகும். முன்பு இம்மருத்துவமனைக்கு தினமும் 1,000 வெளிநோயாளிகள் வந்த நிலையில், தற்போது 3,000 பேர் வருகின்றனர். இதய நோயாளிகளும், நரம்பியல் நோயாளிகளும் 15 நாட்கள் மாத்திரை வாங்குவதற்கு காலை 10 மணிக்கு மேல்தான் வருகிறார்கள். அதனால், சற்று கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
அமைச்சர் அறிவுறுத்தலின்படி, இந்த கூட்ட நெரிசலை சீர்படுத்துவதற்காக மருந்தகங்கள் கவுன்ட்டர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தி கூட்ட நெரிசலை குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தற்போது 5 மருந்தக கவுன்ட்டர்கள் வைத்து 9 முதல் 10 மருந்தாளுநர்கள் மூலமாக மாத்திரைகளை வழங்கி கொண்டிருக்கிறோம். நாளை (இன்று) முதல் மேலும் 2 கவுன்ட்டர்கள் புதிதாக தொடங்க உள்ளோம்.
அத்துடன் நோயாளிகள் சிரமப்படாமல் இருப்பதற்காக குளிர்சாதன வசதி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் செய்து கொடுத்துள்ளோம். அரசு மருத்துவமனையின் தரமான சேவை மேலும் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.