மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) 20-ந் தேதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு உட்பட்ட இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
இதற்கிடையே 38 வயதான கேப்டன் ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து கடந்த வாரம் விடைபெற்றார். இதைத்தொடர்ந்து 36 வயது நட்சத்திர பேட்ஸ்மேன் விராட்கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த திங்கட்கிழமை அறிவித்தார்.
முன்னணி வீரர்களான இருவரும் டெஸ்டில் இருந்து விலகி இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவர்களது இடத்தை யார் நிரப்புவார்கள்? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற சிறந்த வீரர்கள் 50 வயது வரை விளையாடியிருக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரரான யோக்ராஜ் சிங் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், “மிகப்பெரிய வீரரான விராட் கோலி ஓய்வு பெற்றது கண்டிப்பாக இந்தியாவுக்கு இழப்பு. 2011-ல் நிறைய சீனியர்கள் ஓய்வு பெற்றது, நீக்கப்பட்டது போன்ற விஷயங்களால் இந்திய அணி உடைந்து போனது. விராட், ரோகித்திடம் இன்னும் நிறைய கிரிக்கெட் மீதமுள்ளதாக நான் உணர்கிறேன்.
இளம் வீரர்களால் நிறைந்த அணியை உருவாக்கினால், அது எப்போதும் உடைந்து போகும். ஒருவேளை விராட் சாதிக்க இனி எதுவும் இல்லை என்று நினைக்கலாம். அவர்களை போன்ற மகத்தான வீரர்கள் 50 வயது வரை விளையாடியிருக்க வேண்டும்.இளைஞர்களை ஊக்குவிக்க இப்போது யாரும் இல்லாததால் அவர்களின் ஓய்வு குறித்து நான் வருத்தப்படுகிறேன். ஏனெனில் தற்போது இளம் கிரிக்கெட் வீரர்களை ஊக்கப்படுத்த யாருமில்லை”என்று கூறினார்.