புதுடெல்லி,
வக்பு சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. கடந்த 5-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதலுடன் சட்டம் ஆனது. அந்த சட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க., அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி, இடதுசாரி கட்சிகள், முஸ்லிம் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் என 70-க்கு மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஆனால், கடந்த மாதம் 17-ந் தேதி நடந்த விசாரணையின்போது, 5 மனுக்களை மட்டும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக சுப்ரீம் கோர்ட்டு கூறியது. மே 5-ந் தேதி, இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதாகவும் தெரிவித்தது. அதுவரை, வக்பு வாரியங்களில் புதிய நியமனங்களை செய்ய மாட்டோம் என்று மத்திய அரசு உறுதி அளித்தது. மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்கக்கூடாது என்று கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில், தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 5 ஆம் தேதி விசாரணைக்கு வந்தன.தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, தான் 13-ந் தேதி ஓய்வு பெறுவதால், அடுத்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு வழக்கை விசாரிக்கும் என்று அறிவித்தார். இதன்படி, தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில், மே 15-ந் தேதி இம்மனுக்கள் விசாரணைக்கு வரும் என்று தெரிவித்தார். அதன்படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தனர்.