சென்னை: ‘திருப்பதி பெருமாளை இழிவுபடுத்தி பாடல் வெளியிட்ட நடிகர் சந்தானம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நகைச்சுவை நடிகர் சந்தானம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் திருப்பதி பெருமாளை கேலி செய்யும் விதமாக, ‘பார்க்கிங் காசு கோவிந்தா, பாப்கார்ன் டேக்ஸ் கோவிந்தா, ஹீரோயின் நடிப்பு கோவிந்தா, ஃபேன்ஸோட நிலைமை கோவிந்தா’ என்ற பாடல் காட்சி இடம் பெற்றுள்ளது.
கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக எந்த தெய்வத்தையும், எந்த மதத்தையும், எந்த வழிபாட்டு முறையையும் கிண்டல் செய்யக்கூடாது என்ற பொது புத்தி இல்லாமல், இந்து தெய்வத்தை இழிவுபடுத்தி பாடினால், ஒரு எதிர்ப்பு, விளம்பரம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் இதை செய்திருக்கிறார் சந்தானம்.
இதுகுறித்து அவரிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்கும்போது, ‘நீதிமன்றத்துக்கும், தணிக்கை குழுவுக்கும் தான் நான் பதில் சொல்வேன். போகிறவன் வருகிறவனுக்கு எல்லாம் பதில் சொல்ல மாட்டேன்’, என ஆணவத்தோடு பேசியிருக்கிறார்.
இந்த படத்தில் வரும் இந்து விரோத சர்ச்சைக்குரிய பாடல் வரிகளை நடிகர் சந்தானம் நீக்க வேண்டும். மேலும், திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் விஐபி என்ற அடிப்படையில் அவருக்கு எந்த சலுகையும் காட்டக்கூடாது. நடிகர் சந்தானம் மீது புகார் தெரிவித்து, திருப்பதி திருமலை தேவஸ்தானம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.