Doctor Vikatan: `வாழ்க்கைத்துணை இறப்பு' அதிர்ச்சியில் கணவன், மனைவி உயிரிழப்பது ஏன்?

Doctor Vikatan:  திருவண்ணாமலையில் மகன் விபத்தில் சிக்கி உயிரிழந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் அவரின் அம்மா மயங்கி விழுந்து இறந்த செய்தியை ஊடகங்களில் பார்த்தேன்.

கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவி இறப்பது, மனைவி இறந்த  தகவல் கேட்டு கணவர் இறப்பது போன்ற  செய்திகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம். இதை எப்படிப் புரிந்துகொள்வது… இதன் பின்னணி என்ன?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

மருத்துவர் சுபா சார்லஸ்

ஒருவருக்கொருவர் அந்நியோன்யமாக வாழும் நிலையில் இருவரில் ஒருவர் இறந்தபின் அவரோடு அந்த மற்றொருவரும் உயிரிழக்கும் சம்பவம் புதிதல்ல.. தொன்றுதொட்டு நடந்து வரும்  நிகழ்வுதான்.

உணர்வுகள் நம் மனதை மட்டுமன்றி, உடலையும் பெரிதும் பாதிக்கக்கூடியவை. அவை மிகவும் சக்தி வாய்ந்தவை. இதயத்தைத் தாக்குபவை, மூளையைத் தாக்குபவை. உடலின்  உள் உறுப்புகளைத் தாக்கக்கூடியவை. 

மருத்துவத்தில் ‘மாஸிவ் வாசோவேகல் சின்கோப்பி’ (Massive Vaso Vagal syncope) என்றொரு நிலை குறித்துச் சொல்வோம். அதாவது இது ஒருவகையான மயக்கம். உடலில் ஏற்படும் சில எதிர்வினைகளால் உண்டாவது. இந்த எதிர்வினைகள் இதயத் துடிப்பையும் ரத்த அழுத்தத்தையும் திடீரென குறைத்து, மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தையும் குறைக்கிறது. இதனால் மயக்கம் ஏற்படுகிறது. 

சிலர் ரத்தத்தைப் பார்த்தால் மயங்கி விழுந்து விடுவார்கள். இன்னும் சிலர், அதிர்ச்சிகரமான சம்பவத்தைக் கேள்விப்படும்போது தாங்க முடியாமல் மயங்கி விழுந்து விடுவார்கள். சிறிது நேரத்தில் அவர்களாகவே எழுந்துவிடுவார்கள். 

திடீர் மற்றும் தீவிரமான மன அழுத்தம் காரணமாக சில சமயங்களில் இதயம் தற்காலிகமாக பலவீனமடையலாம்.

அரிதாக சில சமயங்களில் அதீத உணர்ச்சி கொந்தளிப்பினால் பாதிக்கப்பட்டு சுயநினைவை இழந்து, இதயத்துடிப்பு குறைந்து ரத்த அழுத்தமும் குறைந்து, அந்த நபர் உயிரிழக்கும் நிலை கூட ஏற்படலாம்.

நெருங்கியவரின் மரணம் ஏற்படுத்தும் துக்கம் மிகவும் ஆழமானதாக இருக்கலாம். இது உடலில் அதிகப்படியான மன அழுத்த ஹார்மோன்களை (stress hormones) வெளியிடத் தூண்டும். இந்த ஹார்மோன்கள் இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் போன்றவற்றை அதிகரிக்கலாம்.

நீண்டகால அல்லது தீவிரமான மன அழுத்தம் இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். திடீர் மற்றும் தீவிரமான மன அழுத்தம் காரணமாக சில சமயங்களில் இதயம் தற்காலிகமாக பலவீனமடையலாம். இது மாரடைப்பின் அறிகுறிகளைப் போலவே இருக்கும். ஏற்கெனவே இதய நோய் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஆபத்தானது. ஏற்கெனவே இதய நோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்கள் இருப்பவர்களுக்கு,  துக்கத்தின் அதிர்ச்சியால் இந்த நோய்கள் மோசமடைந்து உயிரிழப்பை ஏற்படுத்தலாம்.

தம்பதி

வயதானவர்களுக்கு உடல் பலவீனமாக இருக்கும். மரணச் செய்தி ஏற்படுத்தும் அதிர்ச்சியை அவர்களது உடலால் தாங்க முடியாமல் போகலாம்.

துக்கத்தைத்  தாங்க முடியாத நிலையில் இருக்கும் நபர்களுக்கு உடனடி மருத்துவ மற்றும் உளவியல் உதவி வழங்க வேண்டியது மிகவும் முக்கியம்.  

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.