கீழடி அறிக்கையை திருப்பியனுப்பிய மத்திய அரசு: சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

சென்னை: கீழடி அறிக்கையில் திருத்தம் தேவை என ஒன்றிய தொல்லியல் துறை அமர்நாத் இராமகிருஷ்ணனின் அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளது. தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும் என்றென்றும் எதிரி பாஜக என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘ கீழடி எனும் வரலாற்றுத் தொல் நகரம் கண்டறிய நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையை அமர்நாத் இராமகிருஷ்ணன் 2023 ஜனவரி மாதம் ஒன்றிய தொல்லியல் துறைக்கு சமர்பித்தார்.

ஆனால் ஒன்றிய தொல்லியல் துறை அந்த ஆய்வறிக்கையை வெளியிடவில்லை. இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பபட்ட போது “விரைவில் வெளியிடப்படும்” என்று தொல்லியல் துறையால் உறுதிமொழி அளிக்கப்பட்டது. ஆனாலும் இப்பொழுது வரை அறிக்கை வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் வரும் 27 ஆம் தேதி நாடாளுமன்ற உறுதிமொழிக் குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், கீழடி அறிக்கையில் திருத்தம் தேவை என ஒன்றிய தொல்லியல் துறை அமர்நாத் இராமகிருஷ்ணனின் அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளது.

கீழடியின் உண்மைகளை அதிகார பூர்வமாக அறிவிக்க ஒன்றிய தொல்லியல் துறை எளிதில் முன்வராது.

“தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும்” என்றென்றும் எதிரிகள் யார் என்பதை ஒன்றிய தொல்லியல் துறையின் ஒவ்வொரு செயலும் நிரூபித்துக்கொண்டிருக்கிறது.

புராணங்களை வரலாறாக மாற்ற நாள்தோறும் பணியாற்றி வரும் பாஜக அரசு அதே வேகத்தோடு நமது வரலாற்றை மறைக்கவும் பணியாற்றி வருகிறது.

தமிழர்களின் வரலாற்றுத் தொன்மை என்பது பாஜக அரசின் அரசாணையோடு சம்பந்தபட்டதல்ல.. நிரூபிக்கப்பட்ட அறிவியலோடு சம்பந்தபட்டது!

அதனை மறைக்க அவர்களால் ஒரு போதும் முடியாது.

“கீழடி தமிழர்களின் தாய்மடி” என்ற உண்மையை உரக்கச்சொல்வோம்’ எனத் தெரிவித்துள்ளார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.