இறந்தவர்கள் உயிர்பெற்று வருவதை மர்மக் கதைகளில் தான் படித்திருக்கிறோம். ஆனால், உயிரோடு இருப்பவர்கள் இறந்துவிட்டதாகவும், இறந்தவர்கள் உயிரோடு இருப்பது போலவும் சான்றழித்து அந்த மர்மக் கதைகளை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டிருக்கிறார்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டுக் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபான் பாய். இவர், ‘நான் நலமாக இருக்கும் போது நான் இறந்துவிட்டதாக சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இறப்புச் சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். அதை வைத்து இன்னொருவர் எனது சொத்தை அபகரித்துள்ளார். இப்போது, நான் உயிரோடு இருப்பதாக விஏஓ-விடம் சான்றிதழ் பெற்று எனது சொத்தை மீட்க போராடிக் கொண்டிருக்கிறேன்’ என மாவட்ட ஆட்சியரிடம் அண்மையில் மனு கொடுத்து அனைவரையும் திகைக்க வைத்தார்.
இதேபோல், வானாபுரத்தை அடுத்த சிறுபனையூர் தக்கா கிராமத்தைச் சேர்ந்தவர் சையத் பக் ஷி மனைவி காதர் பீ. இவர் உயிருடன் நலமாக இருக்கிறார். ஆனால், இதே கிராமத்தைச் சேர்ந்த ரகுமத்துல்லா என்பவர், காதர் பீ இறந்துவிட்டதாக வருவாய் துறையில் போலியாக இறப்புச் சான்றிதழ் பெற்று இவரது சொத்தை அபகரித்துள்ளார். இதையறிந்து பதறிப்போன காதர் பீ, ‘நான் உயிரோடு இருக்கும்போது, எப்படி இறப்புச் சான்று அளித்தீர்கள்?’ எனக் கேட்டு, சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலக வாசலில் கழுத்தில் மாலை அணிந்து கொண்டு பிணம் போல் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடுமளவுக்கு இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது. உளுந்தூர்பேட்டை வட்டம் வெள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவர் நெய்வேலி டவுன் ஷிப்பில் வேலை செய்துவந்த நிலையில் 2016-ல் இறந்துவிட்டார். இவரது இறப்பைப் பதிவு செய்து என்எல்சி டவுன் ஷிப் நிர்வாகம் இறப்புச் சான்றிதழும் வழங்கியுள்ளது. ஆனால், கோவிந்தசாமி 2023-ல் தனக்குச் சொந்தமான நிலத்தை ஆறுமுகம் என்பவருக்கு உளுந்தூர்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக ஆவணங்களை வைத்திருக்கிறார்கள். 7 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து போனவர் எப்படி உயிரோடு வந்து பத்திரப் பதிவு செய்து கொடுத்தார் என்ற கோணத்தில் இப்போது விசாரணை நடந்து வருகிறது.
இதெல்லாம் ஒருபுறமிருக்க, 20 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்ட மாராசிரியர் என்பவருக்கு இறப்புச் சான்றிதழ் கேட்டு அவரது வாரிசுதாரரான விஜயலட்சுமி ஓராண்டாக அலைந்து கொண்டிருக்கிறார். பிறப்பு, இறப்பு பதிவு மற்றும் சான்றிதழ்கள் வழங்குவதில் அரசு கண்டிப்பான விதிமுறைகள் அமலில் வைத்திருந்தாலும் அதையெல்லாம் பைபாஸ் செய்துவிட்டு வருவாய்த் துறையினரைக் கைக்குள் போட்டுக் கொண்டு சிலர் இப்படி புகுந்து விளையாடுகிறார்கள்.
இன்னும் சில இடங்களில் வருவாய்த் துறையினருக்குத் தெரியாமலேயே போலி ஆவணங்களை தயார் செய்தும் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேற்சொன்ன சம்பவங்களில் காதர் பீ என்பவருக்கு அளிக்கப்பட்ட இறப்புச் சான்று தொடர்பான சர்ச்சையில் சிக்கி வட்டாட்சியர் சசிகலா இடமாற்றம் செய்யப்பட்டார்.
அவரிடம் இதுகுறித்து கேட்டபோது, “அந்தச் சான்றிதழ் எப்படி வழங்கப்பட்டது எனத் தெரியவில்லை. இது தொடர்பாக வானாபுரம் வட்டாட்சியர் வெங்கடேசன் தான் கோட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்பினார். அவரிடமே கேளுங்கள்” என்றார்.வானாபுரம் வட்டாட்சியர் வெங்கடேசனிடம் கேட்டதற்கு, “சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தான் காதர் பீக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கியுள்ளனர். ஆனால், புதிதாக உருவாக்கப்பட்ட வானாபுரம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அந்த ஃபைலை தள்ளிவிட்டுள்ளனர்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சண்முகம் விசாரணை நடத்தி கோட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்” என்றார். நாம் சண்முகத்தை தொடர்பு கொண்டு இது விஷயமாக விசாரித்த போது, “நான் இந்த சீட்டுக்கு வந்து ஒரு மாதம் தான் ஆகிறது. அதனால் இந்தப் பிரச்சினை குறித்து எனக்கு முழுமையாக எதுவும் தெரியவில்லை” என்று தன் பங்கிற்கு நழுவிக்கொண்டார்.
இதனிடையே, போலியாக இறப்பு மற்றும் பிறப்புச் சான்றிதழ்களை தயாரித்தும், துணை வட்டாட்சியரின் போலி முத்திரைகளை தயார் செய்தும் மோசடியாக சொத்து மாற்றம் செய்ததாக சங்கராபுரத்தை அடுத்த புத்திராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மீது சங்கராபுரம் வட்டாட்சியர் விஜயன் போலீஸில் புகாரளித்தார். இதையடுத்து சங்கராபுரம் போலீஸார் சுப்பிரமணியிடம் விசாரணை நடத்தி அவரைக் கைது செய்தனர்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் கமலக்கண்ணன், “அனைத்து கோப்புகளும் துணை வட்டாட்சியர் மூலம்தான் வட்டாட்சியருக்குச் செல்லும். எனவே இந்த விஷயத்தில் வருவாய்த்துறையினர் தவறு செய்ய வாய்ப்பில்லை. துறைக்கு சம்பந்தமில்லாத நபர்கள் தான் போலியாக சான்றிதழ்கள் மற்றும் வருவாய்த்துறை முத்திரைகளை தயார் செய்து இப்படி சொத்துகளை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும்” என்று வருவாய்த் துறையினருக்கு வக்காலத்து வாங்கினார்.