தனது குற்றப் பின்னணியை மறந்து புதிய வாழ்க்கையைத் தொடங்க மலேசியா வருகிறார் போல்ட் கண்ணன் (விஜய் சேதுபதி). அங்கே, தொழிலதிபராகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் யோகி பாபு (அறிவு) அவரைத் தனது நண்பனின் உறவினராக அறிமுகப்படுத்தி, தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு, எதிர் வீட்டில் வசிக்கும் நாயகி ருக்குவுக்கும் (ருக்மணி வசந்த்) போல்ட் கண்ணனுக்கும் காதல் மலர்கிறது. இந்தச் சூழலில், ருக்குவுக்கு அவரது வளர்ப்புத் தந்தையால் (பப்லு பிருத்விராஜ்) சொத்துப் பிரச்னை இருப்பது தெரியவருகிறது. அதைத் தீர்த்தால் மட்டுமே அவரது தொல்லையில் இருந்து விடுபட முடியும் என்ற கட்டாயம் ஏற்படுகிறது. இந்த நிலையில், நாயகன் எவ்வாறு உதவுகிறார், அதனால் அவருக்கு ஏற்படும் சிக்கல்கள் என்ன என்பதை கமர்ஷியல் மசாலாவுடன் கலந்து சொல்கிறது ‘ஏஸ்’.

விஜய் சேதுபதியின் அமைதியான நகைச்சுவை மற்றும் நக்கல் பாணி, காட்சிகளுக்குப் பொருந்தி, முழுப் படத்தையும் தாங்கி நிற்கிறது. நடிப்புக்கு தீனி போடும் கதையல்ல என்றாலும், கமர்ஷியல் மீட்டரில் தேவையானவற்றை திறம்பட வழங்கியிருக்கிறார். யோகி பாபு தனது நகைச்சுவை ஒன்லைனர்களை திரை முழுவதும் அடுக்கியிருக்கிறார்; ஆனால், அவற்றில் பாதி மட்டுமே சிரிப்பை வரவழைக்கின்றன. அந்த உருவக்கேலியைத் தவிர்க்கலாமே யோகி! நாயகி ருக்மிணி வசந்த் காதல் காட்சிகளிலும் எமோஷனலான இடங்களிலும் நல்லதொரு நடிப்பை வழங்கியிருக்கிறார்; தமிழுக்கு நல்வரவு! திவ்யா பிள்ளை, பிரிசில்லா நாயர் ஆகியோரின் நடிப்பில் குறை இல்லை. வில்லனாக வரும் பப்லு பிருத்விராஜின் நடிப்பில் செயற்கைத்தனம் சற்று அதிகமாகத் தெரிகிறது. பி.எஸ். அவினாஷின் வில்லத்தனம் உடல் மொழியால் பாதி கிணற்றைத் தாங்குகிறது.
கண்ணைக் கவரும் ஒளியமைப்பு மற்றும் சிறப்பான காட்சிக் கோணங்களுடன் மலேசியாவை அழகாக காட்சிச் சட்டகத்துக்குள் அடக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கரண் பி. ராவத். குறிப்பாக, பால்கனியில் நின்று விஜய் சேதுபதி இரவில் நாயகியைப் பார்க்கும் காட்சிகள் சிறப்பான ஒளி உணர்வுடன் உள்ளன. படத்தொகுப்பாளர் ஃபென்னி ஆலிவர், தொந்தரவு செய்யாத வெட்டுகளை வழங்கியதோடு, போக்கர் விளையாட்டைக் காட்சிப்படுத்தியது, ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சிக்குத் தாவும்போது அதற்கேற்ற டிரான்சிஷன்களைப் பயன்படுத்தியது எனக் கச்சிதமான பணியைச் செய்திருக்கிறார். இருப்பினும், கத்தரிக்கப்பட வேண்டிய இடங்கள் இன்னும் பல உள்ளன. காதல் காட்சிகளில் தொந்தரவு செய்யாமல் செல்லும் சாம் சி.எஸ்-ஸின் பின்னணி இசை, ஆக்ஷன் காட்சிகளில் டெசிபலை உயர்த்துகிறது. ஆனாலும் சைலன்ஸுக்கும் கொஞ்சம் இடம் விட்டிருக்கலாம். தாமரையின் வரிகளில், ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் ‘உருகுது உருகுது’ என்ற மெலோடி பாடல் ரசிக்க வைக்கிறது. போக்கர் விளையாடும் கிளப், குப்பைக் கிடங்கு ஆகியவற்றை கலை இயக்குநர் ஏ.கே. முத்து திறமையாக வடிவமைத்திருக்கிறார்.

மலேசியாவைப் பின்னணியாகக் கொண்டு, நகைச்சுவை, ஆக்ஷன், காதல் என எல்லாம் கலந்த கமெர்ஷியல் கலவையாக படம் நகர்கிறது. ஆனால், அதை சுவாரஸ்யமாக வழங்கியிருக்கிறதா என்றால், அது கேள்விக்குறியே! யோகி பாபு – விஜய் சேதுபதி கூட்டணி ஆங்காங்கே சிரிக்க வைப்பது ஆறுதலாக இருந்தாலும், தூய்மைப் பணியாளரைக் குறித்து ‘குப்பை பொறுக்கி’ என்ற வசனத்தை மீண்டும் மீண்டும் சொல்லி சிரிப்பை எதிர்பார்ப்பது அபத்தம்! ரெஸ்டாரன்ட் காட்சிகளில் பெண்களிடம் தகராறு செய்யும் ஆண்களை வெளுக்கும் நாயகனின் காட்சிகள் வழக்கமான தமிழ் சினிமா பாணியாக இருந்தாலும், சண்டைக் காட்சிகளும் அதில் வரும் சிறு வசனங்களும் சலிப்பைத் தரவில்லை என்பது ஆறுதல்.
படத்தின் தலைப்பை உணர்த்தும் ‘ஏஸ்’ கார்டு விளையாட்டை (போக்கர்) காட்சிப்படுத்திய விதம், அந்த விளையாட்டைப் பற்றித் தெரியாதவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்றாலும் புரிந்தவர்களுக்கு சுவாரஸ்யம் தரலாம். முக்கியமான கொள்ளை சம்பவமெல்லாம் ‘என்னது, இவ்வளவு ஈஸியாக இருக்கிறதே’ என்ற உணர்வையே தருகிறது. அதற்கான டீடெய்லிங்குக்குக் கொஞ்சமேனும் மெனக்கெட்டிருக்கலாம். அதே சமயம், க்ளைமாக்ஸ் நெருங்கும் கடைசி 20 நிமிடங்களில் இதை ஓரளவு சரி செய்திருக்கிறார் இயக்குநர். நாயகன் போடும் ஸ்கெட்சும் அதைப் படமாக்கிய விதமும் பாராட்டத்தக்கது.

பாலியல் ரீதியாக ஒரு பெண் பாதிக்கப்பட்டு மிரட்டப்பட்டு வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது, அதற்கு நாயகனே நீதி வாங்கித் தரவேண்டும் என்ற காட்சிகள் எல்லாம் தமிழ் சினிமா ஏற்கெனவே கடந்து வந்துவிட்ட ஒன்று சாரே! அந்தக் கதாபாத்திர வடிவமைப்பையும் அந்தத் துணைக் கதையையும் கொஞ்சம் கூடுதல் முதிர்ச்சியுடன் அணுகியிருக்கலாம். தொழில்நுட்ப ரீதியாக நல்ல தரத்தில் இருக்கும் ‘ஏஸ்’, திரைக்கதை மற்றும் நகைச்சுவையில் சறுக்கி, சுவாரஸ்யம் குறைந்த போக்கர் ஆட்டமாக ஏமாற்றமளிக்கிறது.