2026-ம் ஆண்டு வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, திருச்சி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் முத்தரையர் சமூகத்தினரை கவர்வதற்காக திருச்சியில் நேற்று நடைபெற்ற பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவில் பங்கேற்க பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரபலங்கள் குவிந்தனர்.
பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவின்போது, திருச்சி பாரதிதாசன் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அரசு சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகளின் உள்ளூர் நிர்வாகிகள் மட்டுமே மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம். ஆனால், நிகழாண்டு விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் திருச்சியில் முகாமிட்டு பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திமுக சார்பில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன் என ஒரு அமைச்சர் பட்டாளமே மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது.
பாஜக சார்பில், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல். முருகன், மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பிரபலங்களும், மதிமுக சார்பில் முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொகையா உள்ளிட்டோரும், அமமுக சார்பில், அக்கட்சியின் நிறுவனர், தலைவர் டிடிவி.தினகரன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகி்யோரும் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு வரும் பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழா இது என்பதாலும், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கும் முத்தரையர் சமூக வாக்காளர்களை கவருவதற்கு அவர்கள் மிகவும் மதிக்கும் தலைவரான பெரும்பிடுகு முத்தரையருக்கு மரியாதை செய்வது அவசியம் என கட்சி தலைவர்கள் அரசியல் கணக்குப்போட்டு இந்த ஆண்டு சதய விழா நிகழ்ச்சிக்கு அணிவகுத்து வந்துள்ளனர் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.