‘தக் லைஃப்’ திரைப்படம் ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ரிலீஸையொட்டி இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலும் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர் சுற்றி வருகின்றனர்.

இன்றைய தினம் சென்னை சாய் ராம் கல்லூரியில் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழாவை நடத்தி வருகின்றனர். படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்கள்.
இதில் த்ரிஷா பேசுகையில், “‘நாயகன்’ படத்துக்குப் பிறகு கமல் சாரும், மணி ரத்னம் சாரும் இணைந்து படம் பண்ணுறதுக்கு 37 வருஷம் காத்திருந்தேன். சில படங்கள் எனக்கு எப்போதும் ஸ்பெஷலா இருக்கும். அதுக்கு என்ன காரணம்னு தெரியல. கமல் சார் தொடர்ந்து ‘நான் சினிமாவோட மாணவன்’னு சொல்றார். நான் அவர்கிட்ட இருந்து நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டிருக்கேன். நான் இந்தப் படத்தோட கதாபாத்திரத்துக்கு பொருந்தியிருப்பேனானு எனக்கும் மணி சாருக்கும் தெரியல. சமீபத்திய பேட்டியில்கூட, குந்தவை கதாபாத்திரத்துக்கு நேரெதிரான கதாபாத்திரம்னு சொல்லியிருந்தார். ட்ரெய்லர் வந்ததும், ‘நீங்க யாருக்கு ஜோடியா நடிச்சிருக்கீங்க?’னு கேட்கிறாங்க.

நீங்க பார்த்தது வெறும் ரெண்டு நிமிஷம்தான். ரெண்டு மணி நேரத்துக்குப் பிறகு படம் உங்களுக்கு முழுமையா புரியும். நான் இந்தப் படத்துல இல்லைன்னாலும், இன்னைக்கு ரஹ்மான் சாருக்காக வந்திருப்பேன்” என்றவர், ரசிகர்களை நோக்கி, “உயிர் எப்போதுமே உங்களுடையதுதான். எனக்கு இந்தப் படத்துல பிடிச்ச பாடல் ‘முத்த மழை’தான். இந்தப் படத்துல என்னோட கதாபாத்திரம் சிங்கர்னு சொல்ல முடியாது. இசையை விரும்பக்கூடிய ஒருத்தியா இந்தப் படத்துல நடிச்சிருக்கேன். என்னைப் பொறுத்தவரைக்கும், இந்தப் படத்துல எல்லோருமே பாஸிடிவ்தான். ஆனா, எல்லோருக்குமே ஒரு க்ரே ஷேட் இருக்கும்,” என்று கூறி முடித்தார்.