கேரளாவில் தென்மேற்குப் பருவமழை நேற்று தொடங்கியது. தமிழகத்திலும் மழை பரவியுள்ள நிலையில், இன்றும், நாளையும் நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்’ கொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் அமுதா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்மேற்குப் பருவமழை கேரளாவில் நேற்று (மே 24) தொடங்கியது. தமிழகத்திலும் தென்மேற்குப் பருவமழை பெரும்பாலான பகுதிகளில் பரவியுள்ளது. அரபிக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மத்திய கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு கொங்கன் கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மற்றும் தபோலிக்கு இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடந்தது.
மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 27-ம் தேதி உருவாகக்கூடும். இதன் காரணமாக இன்று முதல் 27-ம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 28 முதல் 30-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்றும், நாளையும் கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
மேலும், வரும் 27-ம் தேதி கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 28-ம் தேதி கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, பந்தலூரில் 11 செ.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 9 செ.மீ., நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 8 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்கு, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் 7 செ.மீ., நீலகிரி மாவட்டம் விண்ட் வொர்த் எஸ்டேட், தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர், கோவை மாவட்டம் சோலையாறு, வால்பாறை, திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சி, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஆகிய இடங்களில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில்… சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. மடிப்பாக்கத்தில் 4 செ.மீ., ஆலந்தூர், சென்னை விமான நிலையம் ஆகிய இடங்களில் 3 செ.மீ., மீனம்பாக்கம், வேளச்சேரி, மாமல்லபுரம், ராஜா அண்ணாமலை புரம், சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் 2 செ.மீ., பள்ளிக்கரணை, கிண்டி, அமைந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் தலா ஒரு செமீ மழை பதிவாகியுள்ளது. நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.