கடப்பா: “ஊழலை ஒழிக்க ரூ.500 நோட்டுகளையும் திரும்பப் பெற வேண்டும்” என தெலுங்கு தேசம் கட்சியின் மாநாட்டுக் கூட்டத்தில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தினார். .
மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்ட போது பிரதமர் மோடி வசம் தேசத்தின் டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பாக அறிக்கை ஒன்றை வழங்கியிருந்தார் சந்திரபாபு நாயுடு. அப்போது ரூ.500, ரூ.1,000 மற்றும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை தனது பேச்சில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுங்கட்சி சார்பில் கடப்பாவில் நடைபெறும் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, “உலகில் பல நாடுகள் டிஜிட்டல் கரன்சிக்கு மாறியுள்ளன. தெலுங்கு தேசம் கட்சிக்கான நன்கொடை வசூல் கூட டிஜிட்டல் முறையில் தான் பெறப்படுகிறது. இந்நிலையில், இந்த கூட்டத்தின் மூலம் இன்று நான் ஒன்றை வலியுறுத்துகிறேன். ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெற வேண்டும்.
வாக்குக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியம் அரசியலில் இல்லை. மக்கள் பணியை திறம்பட செய்வதே நமது இலக்காக இருக்க வேண்டும். அதை நாம் திறம்பட செய்தாலே மக்கள் நமக்கு வாக்கு செலுத்துவார்கள். உங்கள் பலமான கர ஒலி மூலம் பெரிய மதிப்பு கொண்ட நோட்டுகளை திரும்ப பெறுவதற்கான ஆதரவை வெளிக்காட்டுங்கள். அப்போது தான் தேசத்தில் ஊழலை ஒழிக்க முடியும்” என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.