புதுடெல்லி: ஏஐ தொழில்நுட்பத்தின் வருகையை அடுத்து தகவல் தொழில்நுட்ப (ஐடி) துறை அண்மைக்காலமாக அதிக பணிநீக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் 6,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
இப்போது, ஐபிஎம் நிறுவனம் 8,000 பணியாளர்களை நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது. இதில், மனிதவள துறையைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று கூறப்படுகிறது.
அந்த பணிகளை செய்ய ஏஐ தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்ட குறுகிய காலத்தில் இந்த பணிநீக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகவல்தொழில்நுட்ப துறையைப் பொருத்தவரையில் பல்வேறு வேலைகளைச் செய்ய ஏஐ தொழில்நுட்பத்தை அவர்கள் அதிக அளவில் நம்பியுள்ளனர். இதனால், பல்வேறு பிரிவுகளில் உள்ள பணியாளர்கள் அடுத்தடுத்து நீக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
தகவல்களை ஒழுங்கமைத்தல், ஊழியர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது மற்றும் உள் ஆவணங்களை நிர்வகித்தல் போன்ற பணிகளை கையாளக்கூடிய மென்பொருளை ஐபிஎம் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த பணிகள் மனித தலையீடு தேவையில்லாத மீண்டும் மீண்டும் ஒரே வேலைகளை கவனித்துக்கொள்வதாகும்.
வேலையை மிகவும் திறமையாக்கும் புதிய ஏஐ தொழில்நுட்பங்களைச் சேர்க்க ஐபிஎம் அதன் குழுக்களை எவ்வாறு ஒழுங்கமைத்து வருகிறது என்பதற்கு இந்த பணிநீக்க அறிவிப்பு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது.
குறிப்பாக, மனித வளங்கள் போன்ற பிரிவுகளில் ஏஐ தொழில்நுட்பம் சக்திவாய்ந்ததாக மாறி வருவதை ஐபிஎம் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது.
இதுகுறித்து அதன் தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா கூறுகையில், ” சில வணிக செயல்முறைகளை மேம்படுத்தவும், குழுக்கள் மிகவும் திறமையாக செயல்படவும் ஏஐ மற்றும் ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த மாற்றங்கள் இருந்தபோதிலும், மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை உண்மையில் அதிகரித்துள்ளது” என்றார்.