ஸ்ரீநகர்: பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்தியது போன்ற கோழைத்தனமான தாக்குதல்களுக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சமாட்டோம் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா நேற்று தெரிவித்தார்.
மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும்விதமாக பாரம்பரியத்திலிருந்து விலகி பஹல்காமில் ஒரு சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்துக்கு முதல்வர் உமர் அப்துல்லா நேற்று தலைமை தாங்கினார்.
ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பொறுப்பேற்றதிலிருந்து கோடைகால தலைநகர் ஸ்ரீநகர் அல்லது குளிர்கால தலைநகர் ஜம்முவுக்கு வெளியே அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டது இதுவே முதல் முறை.
இதுகுறித்து வெளியிடப்பட்ட முதல்வர் அலுவலக செய்திக்குறிப்பில், “ தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்ட பஹல்காமில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டது. இது, ஒரு வழக்கமான நிர்வாக பயிற்சி மட்டுமல்ல. கோழைத்தனமான தீவிரவாத செயல்களால் நாங்கள் அச்சுறுத்தப்படவில்லை என்பதற்கான தெளிவான செய்தி.
மக்களின் தைரியத்துக்கு வணக்கம் செலுத்தி பயத்தை பின்னுக்குத் தள்ளுவதை நோக்கமாக கொண்டது இந்த நடவடிக்கை. ஜம்மு-காஷ்மீர் உறுதியாகவும், வலுவாகவும், அச்சமின்றியும் நிற்கிறது ” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
முதல்வர் உமர் அப்துல்லா வெளியிட்ட தனிப்பட்ட பதிவில், “ உள்ளூர் மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்த நாங்கள் பஹல்காம் வந்துள்ளோம். பஹல்காமுக்கு படிப்படியாக திரும்பி வரும் சுற்றுலா பயணிகளுக்கு நன்றி தெரிவிக்கவும் நாங்கள் இங்கு கூடியுள்ளோம். தீவிரவாதிகளின் கோழைத்தனமான தாக்குதல்களுக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சமாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.