`6.5 கோடி கன்னட மக்களைப் புண்படுத்தியுள்ளார்’ – கமல்ஹாசன் பேச்சும், கன்னட அமைப்புகள் கண்டனமும்

நடிகர் கமல்ஹாசன் திரைப்பட புரொமோஷனின் போது தமிழில் இருந்து கன்னடம் தோன்றியதாகப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை நடைபெற்ற தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவுக்கு கன்னட நடிகர் சிவராஜ்குமார் வருகை தந்திருந்தார். கமல் ஹாசன் தனது பேச்சை “உயிரே உறவே தமிழே” எனத் தொடங்கினார்.

Kamal Haasan - Sivarajkumar
Kamal Haasan – Sivarajkumar

பின்னர் கன்னட நடிகர் சிவராஜ் குமார் பற்றி பேசுகையில், “ரசிகர்களாகிய உங்களின் பிரதிநிதியாக, கன்னட சூப்பர் ஸ்டார் இங்கு வந்துள்ளார். ஆனால், அவர் இங்கு தன்னை சூப்பர் ஸ்டாராக அடையாளப்படுத்தவில்லை. என் மகனாக, ஒரு ரசிகனாக, உங்களின் பிரதிநிதியாக வந்துள்ளார். இந்த அன்புக்கு நான் எப்படி அடிபணியாமல் இருக்க முடியும்?” எனப்பேசினார்.

`உங்கள் பாஷை தமிழிலிருந்து வந்தது’

மேலும், “சிவராஜ் குமார் மற்றொரு மாநிலத்தில் வாழும் என்னுடைய குடும்பம். அதனால்தான், உயிரே உறவே தமிழே என என் பேச்சைத் தொடங்கினேன். உங்கள் (சிவராஜ் குமார்) பாஷை தமிழிலிருந்து வந்தது, எனவே முதல் வரி உங்களையும் சேர்த்தது” என்றும் பேசியுள்ளார்.

கமல்ஹாசனின் இந்த பேச்சு கர்நாடகாவில் மோசமான பின்விளைவுகளைச் சந்திக்கிறது. கன்னட ரக்ஷண வேதிகே உள்ளிட்ட தீவிர கன்னட இயக்கங்கள், கமல் எதிர்வினைகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளன.

Thug Life

சில இடங்களில் கன்னட அமைப்பினர் தக் லைஃப் படத்தின் போஸ்டர்களைக் கிழித்ததாகக் கூறப்படுகிறது.

“உங்கள் படம் தடை செய்யப்படும்” – கமல்ஹாசனுக்கு எச்சரிக்கை!

கன்னட ரக்ஷனா வேதிகே தலைவர் பிரவீன் ஷெட்டி, “கமல் கன்னடா தமிழுக்குப் பிறகு பிறந்ததாக பேசியுள்ளார். உங்களை நான் எச்சரிக்கிறேன். உங்களுக்கு கர்நாடகாவில் தொழில் வேண்டுமா? இருந்தும் கன்னடத்தை அவமதிப்பீர்களா?” எனப் பேசியுள்ளார்.

மேலும், “இன்று நீங்கள் கர்நாடகாவில் இருந்திருந்தால் உங்கள் மீது கருப்பு மை வீச தயாராக இருந்தோம். கர்நாடகாவுக்கும், மாநில மக்களுக்கும் எதிராகப் பேசினால், உங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும், உங்கள் படம் கர்நாடகாவில் தடை செய்யப்படும் என்று நாங்கள் எச்சரிக்கிறோம்.

கன்னட ரக்ஷனா வேதிகே – கமல்ஹாசன்

பொங்கிய பாஜக தலைவர்

பாஜக கர்நாடக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா, கமல்ஹாசனின் நடத்தை நாகரீகமற்றது என்றும், ஆணவமான பேச்சு என்றும் விமர்சித்துள்ளார்.

சிவராஜ் குமாரை அழைத்து, தமிழைப் புகழ்ந்ததன் மூலம் கன்னடத்தை அவமதித்ததாகக் கூறியுள்ளார்.

கன்னட படங்களில் நடித்துள்ள கமல்ஹாசன், ‘நன்றி உணர்வின்றி இருப்பதாகவும், முன்னர் இந்துத்துவத்தையும் மத உணர்வுகளையும் புண்படுத்தியுள்ள கமல், இப்போது 6.5 கோடி கன்னட மக்களைப் புண்படுத்தியுள்ளதாக எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கமல்ஹாசன் விளக்கம் அளிக்காவிட்டால் அல்லது மன்னிப்பு கேட்காவிட்டால், கர்நாடகாவில் அவரது படங்களைப் புறக்கணிக்கப் போவதாக தற்போது சில அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.