
2008 – ஐ.பி.எல் தொடங்கப்பட்ட முதல் சீசனின் இறுதியாட்டத்தில் யூசுப் பதானின் அதிரடியால் சென்னை அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது வார்னே தலைமயிலான ராஜஸ்தான் ராயல்ஸ்.

2009 – தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்ட இரண்டாவது சீசனின் இறுதி போட்டியில் ஆர்.சி.பி அணியை 143 ரன்கள் சேஸ் செய்யாமல் தடுத்து, கோப்பையை வென்றது கில்கிறிஸ்ட்டின் டெக்கான் சார்ஜர்ஸ் அணி.

2010 – முதல் இரண்டு சீசன்களாகத் தவறவிட்ட கோப்பையை மூன்றாவது ஆண்டில் மும்பை அணியை வீழ்த்தி வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ். பொல்லார்ட்டை வீழ்த்த தோனி போட்ட மாஸ்டர் பிளான் இன்னமும் கண்ணில் நிற்கிறது.

2011 – பலம்பொருந்திய பெங்களூரு அணியை சேப்பாக்கத்தில் வீழ்த்தித் தொடர்ந்து இரண்டாவது கோப்பையை வென்றது சென்னை அணி. உலகக்கோப்பையையும் வென்றிருந்த தோனிக்கு இக்கோப்பை கூடுதல் ஸ்பெஷல்.

2012 – ஹாட்ரிக் கோப்பைக்கான சென்னையின் கனவை மன்விந்தர் பிஸ்லா எனும் ஒற்றை வீரரைக் கொண்டு தகர்த்து முதல் கோப்பையை முத்தமிட்டது கொல்கத்தா அணி.

2013 – சச்சினின் கடைசி சீசன். இளம் கேப்டன் ரோஹித் தலைமையில் தன் முதல் கோப்பையை வென்று ஐ.பி.எல் களத்தில் அசைக்கமுடியாத ராஜ்ஜியத்தைக் கட்டத்தொடங்கியது மும்பை இந்தியன்ஸ்.

2014 – சாஹாவின் அசத்தல் சதத்தால் 200 ரன்னை டார்கெட்டாக நிர்ணயித்தது பஞ்சாப். ஆனால் மனிஷ் பாண்டேவின் அதிரடியால் மீண்டும் ஒரு ஹை-ஸ்கோரிங் இறுதி போட்டியை வென்று கோப்பையைத் தூக்கியது கொல்கத்தா.

2015 – 203 என்னும் பிரமாண்ட இலக்கை நிர்ணயித்து சென்னை அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தி கோப்பையை வென்றது மும்பை அணி.

2016 – நனவாகும் தூரத்தில் இருந்த ‘ஈ சாலா கப் நம்தே’ கனவை மீண்டும் கனவாகவே ஆக்கி, தன் முதல் கோப்பையை வென்றது வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

2017 – விறுவிறுப்பாக சென்ற இந்த லோ-ஸ்கோரிங் போட்டியில் ரைஸிங் புனே சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியை வெறும் 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது மும்பை இந்தியன்ஸ்.

2018 – இரண்டு ஆண்டுகள் தடை காலத்திற்குப் பிறகு களமிறங்கி இந்த மூன்றாவது கோப்பையின் மூலம் தன் வருகையை உலகிற்கு அறிவித்தது சென்னை அணியின் Dad’s Army.

2019 – கடைசி ஒரு பந்தில் இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில், மலிங்காவின் அசத்தல் வந்துவீச்சால் தன் நான்காவது கோப்பையை வென்றது மும்பை அணி

2020 – கோவிட் தொற்று காரணமாக அமீரகத்தில் நடைபெற்ற இந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தில் டெல்லி அணியை மிகச் சுலபமாக வீழ்த்தி ஐந்தாவது கோப்பையை வென்றது மும்பை.

2021 – ‘வீழ்வேன் என்று நினைத்தாயோ…’ முதல் முறையாக பிளேஆப்ஸிற்குத் தகுதி அடையாமல் முந்தைய ஆண்டு வீழ்ச்சி அடைய, அடுத்த சீசனிலேயே கம்பேக் கொடுத்து கோப்பையை வென்றனர் சென்னை சிங்கங்கள்.

இன்று ஐபிஎல் 15வது சீசனின் இறுதிப் போட்டி. இதுவரை மும்பை – 5 முறையும், சென்னை – 4 முறையும், கொல்கத்தா – 2 முறையும், பிற அணிகள் – 3 முறையும் கோப்பைகளை வென்றிருக்கின்றன. இன்று குஜராத் தன் முதல் கோப்பையை முதல் சீசனிலேயே வெல்லுமா? அல்லது ராஜஸ்தான் 2வது முறை மகுடம் சூடுமா?