பன்னீர்செல்வத்தின் திட்டம் என்ன?

நாளை பொதுக்குழு நடக்க இருக்கும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் நேராக தலைமைக் கழகம் செல்வார் எனத் தகவல். தென் மாவட்டங்களில் இருந்து அதிகமாக தன் ஆதரவாளர்களை வரவழைத்திருக்கிறாராம்.
டெல்டாவிலிருந்து வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்களும் ஓ.பி.எஸ் இல்லத்திற்கு வர தொடங்கியிருக்கிறார்கள். இவர்கள் நேராக தலைமைக் கழகத்தை முற்றுகையிட்டு, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என்கிறார்கள்.
தீர்ப்புக்கு முன்னரே பொதுக்குழு – எடப்பாடி திட்டம்?
9 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் நிலையில் காலை 6:15 மணிக்கு, பொதுக்குழு நடைபெறும் ஸ்ரீவாரு மண்டபத்திற்கு எடப்பாடி பழனிசாமி புறப்படுகிறார் என்கிற தகவலும் வெளியாகி இருக்கிறது.
காலை 7 மணிக்கெல்லாம், பொதுக்குழு அரங்கில் இருக்குமாறு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆர்.எஃப்.ஐ.டி உடனான அடையாள அட்டையை காண்பித்தால் மட்டுமே பொதுக்குழு அரங்கில் அனுமதி அளிக்கபடவிருக்கிறது.
காலையிலேயே பொதுக்குழு உறுப்பினர்களை வரச் சொல்லியிருப்பதால், அவர்களுக்கு டிபன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

காலை 7:30 முதல் 9 மணி வரை ராகு காலம் என்பதால், அதற்கு முன்னரே பொதுக்குழு அரங்கிற்குள் வந்துவிட திட்டமிட்டுள்ளார் எடப்பாடி. நல்ல நேரம் காலை 7:15 மணியுடன் முடிவடைகிறது. அடுத்ததாக, கெளரி நல்ல நேரம் காலை 9:15 மணிக்கு தொடங்குகிறது. அதனால், “காலை 7 – 8 மணிக்கெல்லாம் பொதுக்குழுவை தொடங்கிவிடலாமா?” என எடப்பாடி முகாமில் ஆலோசனை நடைபெறுகிறது என்பது தகவல்.
பல்வேறு திருப்பங்களுக்கு மத்தியில் பொதுக்குழு கூட்டம்!
அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளை காலை அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்துள்ளார். விதிமுறைகளை பின்பற்றாமல் நடத்தப்படும் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

பல்வேறு கேள்விகள், வாதங்கள் நடைபெற்ற நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, திங்கள் காலை 9 மணிக்கு பொதுக்குழு கூட்டம் தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கை தள்ளிவைத்தார். அதாவது பொதுக்குழு 9.15 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு முன்னதாக தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.