திருப்பூர்: ஆன்லைன் சூதாட்டத்துக்கு துணைபோகும் ஆட்சியாக திமுக அரசு உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.
கோவையில் இருந்து ஒட்டன்சத்திரம் செல்லும் வழியில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான பழனிசாமிக்கு அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். பல்லடம் பேருந்து நிலையத்தில் பழனிசாமி தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:
திமுக சார்பில் அளிக்கப்பட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் தற்போதுவரை நிறைவேற்றப்படவில்லை. வாக்களித்த மக்களை திமுக ஏமாற்றிவிட்டது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஒரு பேச்சு, வந்த பின்னர் ஒரு பேச்சு என திமுக உள்ளது. பல்லடம் புறவழிச்சாலை திட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. நூல் விலை ஏற்றத்தால் விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டுஉள்ளது. இதைத் தடுக்க அரசு சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாதம்தோறும் பெண்களுக்கு ரூ.1000, கல்விக்கடன் தள்ளுபடி, முதியோர் உதவித்தொகை, காஸ் மானியம், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு என எதையும் திமுக அரசு செய்யவில்லை. ஆன்லைன் ரம்மி சூதாட்டம் தொடர்பாக நாங்கள் சட்டமே நிறைவேற்றினோம். ஆனால் தற்போது சூதாட்டத்துக்கு துணைபோகும் ஆட்சியாக திமுக அரசு உள்ளது என்றார்.