தமிழ்நாடு மின் வாரியம் அறிவித்துள்ள மின் கட்டண உயர்வில் இருந்து, சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு விலக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மாரியப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மின் வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் கூட்டத்தில், மின் வாரியத்தின் நிர்வாகச் செலவுகள், நஷ்டங்கள் அனைத்தையும் தொழில் நிறுவனங்கள் மற்றும் மின் உபயோகிப்பாளர்கள் தலையில் சுமத்தக் கூடாது. மின் கட்டண உயர்வு அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தோம்.
சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டங்களிலும் மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவரிடமும் 100 சதவீதம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மின் கட்டண உயர்வை அமல்படுத்தக் கூடாது என்று பல்வேறு சங்கங்கள், பொதுமக்கள் சார்பிலும், கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டன.
இந்த நிலையில், மின் கட்டண உயர்வை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக மின் வாரியத்துக்கு பரிந்துரை செய்திருப்பது அதிர்ச்சியளித்துள்ளது.
அதிக அளவில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டால், தமிழகத்தில் லட்சக்கணக்கான சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் நலிவடைந்து தொழிலை தொடர்ந்து நடத்த முடியாமல் உற்பத்தியை நிறுத்திக் கொள்ளும் நிலை உருவாகும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அளித்திருந்தோம்.
கடந்த 3 ஆண்டுகளாக, கரோனா தொற்றினால், நஷ்டங்களை சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் சந்தித்துள்ளன.
எனவே, சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களையும், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காத்திட, மின் கட்டண உயர்வை முழுமையாக திரும்பப்பெற முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மின் கட்டண உயர்வை அமல்படுத்தக் கூடாது என்று பல்வேறு சங்கங்கள், பொதுமக்கள் சார்பிலும், கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டன.