சென்னை: தமிழகத்தில் பொதுமக்கள், சிறு தொழில் நிறுவனங்கள் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், மின்கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நடத்திய கருத்துகேட்பு கூட்டம் கண்துடைப்பா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மின்வாரியம் நஷ்டத்தில் இயங்கி வருவதால் வருவாயை ஈட்டுவதற்காக மின்கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டது. இதற்காக, மின் பயன்பாடு மற்றும் புதிய மின் இணைப்பு வழங்குவதற்கான கட்டணங்களை உயர்த்த மின் வாரியம் முடிவு செய்தது. கட்டண உயர்வுக்கு அனுமதி கோரிதமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கடந்த ஜூலை 18-ம் தேதி மனுக்களை சமர்ப்பித்தது. இதுதொடர்பாக கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்தது. கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி கோவையிலும், 18-ம் தேதி மதுரையிலும், 22-ம் தேதி சென்னையிலும் கருத்துகேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன.
அதில் பங்கேற்றவர்கள் மின்கட்டணத்தை உயர்த்த கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மின்கட்டணத்தை உயர்த்தும் முடிவுக்கு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதுதவிர, மின்வாரியம் சார்பிலும் இணையதளம் மூலமாக மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. ஆகஸ்ட் 24-ம் தேதி வரை 4,500 பேர் கருத்து தெரிவித்திருந்தனர். அவர்களுக்கு மின்வாரியம் சார்பில் பதில்கள் அளிக்கப்பட்டதுடன், அந்த விவரமும் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற கருத்துகேட்பு கூட்டத்தில் மே 17இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசும்போது, ‘‘மின்வாரியத்தின் நஷ்டத்துக்கு யார் காரணம்? கருத்துகேட்பு கூட்டத்தை 3 நகரங்களில் மட்டும் ஏன் நடத்துகிறீர்கள்? தமிழகம் முழுவதும் ஏன் நடத்தவில்லை?’’ என்று அடுக்கடுக்கான கேள்வி எழுப்பினார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.
இதேபோல, குடியிருப்போர் சங்கங்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் சங்கங்கள், கைத்தறி நெசவாளர்கள் என பல்வேறு அமைப்புகள், சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்று பேசினர். பெரும்பாலும் அனைவருமே மின்கட்டணத்தை உயர்த்தும் முடிவுக்குகடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏழை, எளிய மக்கள், சிறு தொழில் நிறுவனங்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிவித்தனர்.
ஆனாலும், மின்வாரியம் பரிந்துரைத்த கட்டண உயர்வுக்கு, ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால், ஒழுங்குமுறை ஆணையம் நடத்திய கருத்துகேட்பு கூட்டங்கள் வெறும் கண்துடைப்பா என மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து, கருத்துகேட்பு கூட்டத்தில் பங்கேற்ற இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சி.செல்வராஜ் கூறியதாவது:
மின்வாரியம் பரிந்துரை செய்த கட்டண உயர்வை அப்படியே அமல்படுத்தியதன் மூலம், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நடத்திய கருத்துகேட்பு கூட்டம் வெறும் கண்துடைப்புதான் என்பது நிரூபணம் ஆகியுள்ளது.
மின்மாற்றிகள், மின்கம்பங்கள் உள்ளிட்டபொருட்களை கொள்முதல் செய்ய மின்வாரியத்திடம் பணம் இல்லை. அது மட்டுமின்றி, அதிக பணம் கொடுத்து இப்பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. உதாரணமாக, ஒரு மின்மாற்றியை கடந்த ஆண்டுரூ.3 லட்சம் செலவில் மின்வாரியம் வாங்கியது. அதே மின்மாற்றியை இந்த ஆண்டு ரூ.4.75 லட்சத்துக்கு கொள்முதல் செய்கிறது. இவ்வாறு ஒவ்வொரு பொருளும் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்படுகின்றன.
ஏற்கெனவே வங்கிகளிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால், மீண்டும் கடன் தர வங்கிகள் மறுக்கின்றன. எனவே,பணத் தேவையை சமாளிக்க மின்கட்டணத்தை மின்வாரியம் அதிக அளவில் உயர்த்தியுள்ளது. வருவாயை அதிகரிக்க பல வழிகள் இருக்கும்போது, கட்டண உயர்வு மூலம் ஈடுகட்டுவது ஏற்கக்கூடியது அல்ல. இதனால், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
எனவே, மின்கட்டண உயர்வை எதிர்த்து தேசிய மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர வேண்டும். அங்கும் சாதகமான தீர்ப்பு கிடைக்காவிட்டால், உச்ச நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.