பஸ்கள் கொள்முதலுக்கான டெண்டர் முறைகேடு: 'கெஜ்ரிவால் என்றால் ஊழல் என்று பொருள்'- பாஜக கடும் தாக்கு

புதுடெல்லி,

டெல்லி அரசுக்கு பஸ்கள் கொள்முதலுக்காக வெளியிடப்பட்ட டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படும் விவகாரத்தில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் மீது பா.ஜனதா கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளது.

டெல்லியில் கடந்த 2019-ம் ஆண்டு 1,000 தாழ்தள பஸ்கள் வாங்குவதற்கு வழங்கப்பட்ட டெண்டரில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இதைப்போல பஸ்கள் வாங்கவும், பராமரிக்கவும் கடந்த 2020-ம் ஆண்டு போடப்பட்ட டெண்டரிலும் முறைகேடு புகார் கிளம்பி இருக்கிறது.

இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கேட்ட பரிந்துரைகளுக்கு துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்துள்ளார். இது டெல்லி அரசு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் மேற்படி முறைகேடுகள் தொடர்பாக ஆளும் ஆம் ஆத்மி அரசையும், முதல்-மந்திரி கெஜ்ரிவாலையும் பா.ஜனதா கடுமையாக சாடியுள்ளது. கெஜ்ரிவாலின் நண்பர்கள் பயனடைவதற்காக ஒப்பந்தங்களும், டெண்டர்களும் போடப்படுவதாக கட்சியின் செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘முதலில் கலால் கொள்கை, தற்போது பஸ்கள் வாங்கியதில் முறைகேடு. கெஜ்ரிவால் என்றால் ஊழல் என மாறிவிட்டது’ என தெரிவித்தார்.

மேலும் அவர், ‘உங்களை ‘தீவிர நேர்மையாளர்’ என்று நீங்கள் எப்படி கூறலாம்? நீங்கள் ‘தீவிர ஊழல்வாதி’ என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். முதல்வர் பதவியில் நீடிக்க உங்களுக்கு உரிமை இல்லை’ என்றும் சாடினார். முறைகேடு புகார்களுக்கு ஆம் ஆத்மி பதில் அளிக்காமல், மக்களின் கவனத்தை திசைதிருப்பும் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறைகூறினார்.

இதைப்போல டெல்லி பா.ஜனதா தலைவர் அதேஷ் குப்தா செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘சில நிறுவனங்களின் ஆதாயத்துக்காக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளை மீறி டெண்டர்கள் வழங்கப்பட்டு உள்ளன’ என குற்றம் சாட்டினார்.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தை கெஜ்ரிவால் நம்பமாட்டார் எனவும், நேரடி பணம் வசூல் மட்டுமே அவரது ஒரே நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.