சென்னை: அதிமுக அலுவலக உரிமை விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்றுவிசாரணைக்கு வருகிறது. கட்சியின் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாத ஓபிஎஸ்ஸிடம் சாவியை எப்படி ஒப்படைக்க முடியும் என்று பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதிகலவரம் நடந்ததை அடுத்து, அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில்,சீல் அகற்றப்பட்டு, பழனிசாமி வசம் அலுவலக சாவி ஒப்படைக்கப்பட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்நிலையில், பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஓபிஎஸ் கட்சியின் அடிப்படைஉறுப்பினராகக்கூட இல்லாதபோது, அதிமுக அலுவலகத்தின் அதிகார உரிமையை கோர முடியாது. அதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. அவர் கையாடல் செய்துள்ளார் என்பதால், அவரிடம் சாவியை நீதிமன்றம் ஒப்படைக்க முடியாது.
தவிர, அதிமுக அலுவலகத்தில் ஆதரவாளர்களுடன் அவர் வன்முறையில் ஈடுபட்டார். அலுவலகத்தை சூறையாடினார். பொருட்களை சேதப்படுத்தியுள்ளார். இவ்வாறு கட்சிக்கு எதிராக நடக்கும் ஒருவர், அலுவலக நிர்வாக உரிமையை கோர முடியாது. எனவே, அதிமுக அலுவலக சாவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல, வழக்கின் எதிர்மனுதாரரான தென் சென்னை வருவாய்கோட்டாட்சியர் தரப்பிலும் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அதிமுக அலுவலக பகுதியில் கடந்த ஜூலை 11-ம் தேதி ஏற்பட்ட வன்முறையை கட்டுப்படுத்தவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதுகுறித்து ஓபிஎஸ், இபிஎஸ் தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிமுகஅலுவலக சாவி ஒப்படைப்பு விவகாரம் என்பது, நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, அதிமுக அலுவலக சாவி இபிஎஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதில் கோட்டாட்சியர் தனிப்பட்ட முறையில் முடிவு எடுக்கவில்லை. நீதிமன்றஉத்தரவையே செயல்படுத்தினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக அலுவலக உரிமை விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு, உச்ச நீதிமன்றத்தின்2-வது மூத்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.