விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும், அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று (செப். 11) சோனை நடத்தினர். விஜயபாஸ்கருடன் தொடர்பில் இருந்த மருத்துவர்கள் பலரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. குறிப்பாக, வேல்ஸ் பல்கலை., வேந்தரும், பிரபல தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் தொடர்பான சில இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டில், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது, வேல்ஸ் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை தொடங்குவதற்கு அத்தியாவசிய சான்றினை முறைகேடாக வழங்கியது தொடர்பாக விஜயபாஸ்கர், ஐசரி கணேஷ் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை, வழக்குப்பதிவு செய்தது. இவ்வழக்கு சம்பந்தமாக சென்னையில் 5 இடங்களிலும், சேலத்தில் 3 இடங்களிலும், மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளுர் மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் தலா 1 இடத்திலும் ஆக மொத்தம் 13 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சோதனை நேற்று மாலை நிறைவடைந்த நிலையில், சோதனையில் மொத்தம் 16.37 லட்சம் ரூபாய் ரொக்கமும், 1,872 கிராம் தங்க நகைகளும், 8.28 கிலோ கிராம் வெள்ளி பொருட்கள் கண்டறியப்பட்டன. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 120 ஆவணங்கள், 1 ஹார்ட் டிரைவ், 1 பென்டிரைவ், 2 ஐ போன்கள் மற்றும் 4 வங்கி லாக்கர் சாவிகள் இவ்வழக்கின் விசாரணைக்காக கைப்பற்றப்பட்டன. அதேபோன்று, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்புடைய வீட்டிலும் நேற்று சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.