பாலி: ஜி-20 உச்சி மாநாட்டில் இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்ற உலகத் தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த நினைவுப் பரிசுகள் தனி கவனத்தை ஈர்த்துள்ளன.
இந்தோனேஷியாவின் பாலி தீவில் ஜி-20 உச்சி மாநாடு நடந்து முடிந்துள்ளது. இறுதி நாளான புதன்கிழமை, இந்தோனேஷியாவிடம் இருந்து ஜி-20 கூட்டமைப்பின் தலைமை இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பேசிய பிரதமர் மோடி தனது உரையில், “இந்திய தலைமையின் கீழ் ஜி-20, ஒருங்கிணைந்ததாகவும், லட்சியமும், தீர்க்கமும், செயல் வல்லமையும் கொண்டதாகவும் இருக்கும். உலகிற்கு உத்வேகத்தையும், ஒருங்கிணைந்த செயல்பாட்டையும் வழங்கக்கூடியதாக ஜி-20 இருக்கும் வகையிலான பணிகளை இந்தியா மேற்கொள்ளும்” என்று தெரிவித்தார். | வாசிக்க > இந்தியத் தலைமையின் கீழ் ஜி-20 தீர்க்கமும் செயல் வல்லமையும் கொண்டிருக்கும்: பிரதமர் மோடி உறுதி
நிறைவு நாள் கூட்டத்தின்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டணி அல்பனீஸ், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோரை தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இவர்கள் ஒவ்வொருவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இயற்கை வண்ணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ராதா – கிருஷணன் படத்தை பிரதமர் மோடி வழங்கினார். மரங்கள், மாடு – கன்றுக்குட்டி, மேகம், மழை, பறவைகள் என இயற்கையான பின்னணியில் காதலை பகிர்ந்து கொள்ளக்கூடியதாக இந்த ஓவியம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் கங்க்ரா ஓவியம் இது.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு, துணியால் ஆன கைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட துர்கை ஓவியம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ஓவியத்தில் 14 கைகளுடனும், ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு ஆயுதத்துடனும் சிங்க வாகனத்தின் மீது துர்க்கை அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். அதற்குக் கீழாக 3 பெண்கள் நடனமாடுவது போன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டணி அல்பனீசுக்கு, குஜராத்தின் பித்தோரா ஓவியத்தை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். குஜராத்தின் சோட்டா உதய்பூர் பகுதியில் உள்ள ரத்வா கைவினை கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டது இந்த ஓவியம். பழங்குடி மக்களின் நாட்டுப்புற கலையை பிரதிபலிக்கும் வகையில் இந்த ஓவியம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பழங்குடியின மக்களின் புள்ளி ஓவியத்தைப் போன்றும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு குஜராத்தின் சால்வி குடும்ப துப்பாட்டாவை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். வண்ணங்களின் கலவையாக காட்சி அளிக்கும் இந்த துப்பட்டா, இரண்டு பக்கமும் ஒன்றுபோல் இருக்கக்கூடியது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் மற்றும் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் ஆகியோருக்கு, பிரதமர் நரேந்திர மோடி ‘அகேட் கிண்ணத்தை’ பரிசாக வழங்கினார். இவை குஜராத்தின் கட்ச் பகுதியில் தயாரிக்கப்படுபவை.
இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவுக்கு, குஜராத்தின் சூரத்தில் தயாரிக்கப்பட்ட வெள்ளிக் கிண்ணத்தையும், இமாச்சல் பிரதேசத்தின் கின்னூரில் தயாரிக்கப்படும் புகழ்பெற்ற சால்வையும் பிரதமர் நரேந்திர மோடி பரிசாக வழங்கினார்.
இமாச்சல் பிரதேசத்தின் மண்டி மற்றும் குலு மாவட்டத்தைச் சேர்ந்த திறமையான உலோகக் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட ‘கனல் பித்தளை இசைக்கருவி செட்’ ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸுக்கு பரிசாக அளிக்கப்பட்டது. இந்த பாரம்பரிய இசைக்கருவிகள் தற்போது அதிகளவில் அலங்காரப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.