நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அல்லாமல், மேலும் நான்கு வழக்குகளில் சவுக்கு சங்கர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், அந்த நான்கு வழக்குகளிலும் சவுக்கு சங்கருக்கு இன்று ஜாமீன் கிடைத்திருக்கிறது.
முன்னதாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கர், இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்குவந்த அந்த மேல்முறையீட்டு மனுவில், சவுக்கு சங்கர் மீதான 6 மாத சிறைதண்டனைக்கு நீதிபதிகள் இடைக்கால தடைவிதித்தனர். இருப்பினும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான அன்றே, 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் சவுக்கு சங்கர் மீது பதியப்பட்டிருந்த நான்கு வழக்குகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் பிரிவு அவரை கைதுசெய்து மீண்டும் கடலூர் சிறையிலேயே அடைத்தது.

இந்த நிலையில், கைதான மற்ற வழக்குகள் தொடர்பாக எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. இதில், நான்கு வழக்குகளிலிருந்தும் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியிருக்கிறது. வழக்கு குறித்து வெளியில் எங்கும் பேசக்கூடாது என நிபந்தனை வழங்கியும் உத்தரவிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து விரைவில் சவுக்கு சங்கர் ஜாமீனில் வெளிவருவார் என்று கூறப்படுகிறது.