சூரத்: குஜராத்தில் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள இரண்டு வெளிநாட்டு கிளிகள் திருட்டு போன சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். குஜராத் மாநிலம் சூரத் அடுத்த ஜஹாங்கிர்புரா பகுதியில் விஷால் பாய் படேல் என்பவர் கடந்த 2007ம் ஆண்டு முதல் பறவைகள் பண்ணையை நடத்தி வருகிறார். மற்ற பறவைகளுடன் வெளிநாட்டு இனத்தை சேர்ந்த இரண்டு கிளிகளையும் வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில், அந்த கிளிகள் இரண்டும் கடந்த சில நாட்களுக்கு முன் திருட்டு போனது. அதையடுத்து ஜஹாங்கிர்புரா போலீசில் விஷால் பாய் படேல் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து விஷால் பாய் படேல் கூறுகையில், ‘திருட்டு ேபான இரண்டு (ஆண் – பெண்) கிளிகளின் மதிப்பு ரூ. 15 லட்சம் ஆகும். ஆனால், போலீசார் ரூ. 2 லட்சம் என்று மதிப்பிட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். கொல்கத்தாவில் வசிக்கும் நண்பரிடம் இருந்து இரண்டு வெளிநாட்டு கிளிகளையும் கடந்த 2013ம் ஆண்டில் வாங்கினேன். இரண்டு கிளிகளையும் பராமரிப்பதற்காக மாதம் பத்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் ரூபாய் வரை செலவு செய்து வந்தேன்’ என்றார்.