தி.மு.க அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு தொடர்ச்சியாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள்மீது நடத்தப்பட்ட சோதனையில், சிக்கியவர்களில் விஜயபாஸ்கரும் ஒருவர். அதற்கு முக்கிய காரணம், கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள், உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டதாகவும், அதற்காக பெரும் தொகை லஞ்சமாக வாங்கப்பட்டதாகவும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது எழுந்த குற்றச்சாட்டுதான்.

இந்த விவகாரத்தில், அப்போதைய காவல்துறை டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் பெயரும் அடிபட்டது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக்கோரி, தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன், உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். பின்னர் உச்ச நீதிமன்றம் மூலம் சி.பி.ஐ வசம் சென்ற வழக்கில், குட்கா வியாபாரி மாதவ ராவ், கலால்துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.

அதையடுத்து கடந்த ஜூலையில், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்ட 12 பேரிடம் விசாரணை நடத்த அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கு சி.பி.ஐ அதிகாரிகள் கடிதம் எழுதியதையடுத்து… அதற்கு அரசு அனுமதி கொடுத்தது. இந்த நிலையில் தற்போது, குட்கா ஊழல் வழக்கில், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் முன்னாள் டி.ஜி.பி-க்கள் ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட 21 பேர்மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது.