ஆண்களுக்கு இணையாக பெண்களும் அரசியலில் பங்கேற்க வேண்டும் – திருமாவளவன் பேச்சு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் ஒருங்கிணைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் திருமாவளவனின் மணி விழா நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள சர்.பி.டி தியாகராய அரங்கில் நடைபெற்றது.
அப்போது பேசிய திருமாவளவன், “பெண்களின் அரசியலை தெரிந்துகொள்ளவே இங்கு வந்துள்ளேன். எனக்கு தங்கம் அணிந்துகொள்வதில் ஆர்வமில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தை ஆசையாக எனக்கு அரை சவரன் தங்க மோதிரம் போட்டார். எனக்கு ஒவ்வவில்லை. நான் உடனே கழற்றிவிட்டேன். எனக்கு தங்கம் என்றால் அலர்ஜி. இப்பொழுது நான் தங்கம் கேட்பது எனக்காக அல்ல; நமது கட்சி வளர்ச்சிக்காக. ஒரு கட்சியை நடத்துவது பல லட்சம் குடும்பங்களை ஒரே அமைப்பாக நடத்துவதற்கு சமம். அவதூறுகள், அவமானங்கள், வசவுகள் எல்லாவற்றையும் கடந்து 32 ஆண்டுகளாக தாக்குப்பிடித்து ஆளும் கட்சிகளுக்கு சவால் விடக்கூடிய அளவிற்கு வல்லமை பெற்ற ஒரு பேரியக்கமாக இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியை வழிநடத்திக் கொண்டிருக்கிறோம்.
பொறுப்பாளர்களாக இருந்தாலும் மற்ற கட்சிகளைப் போல பொருளாதாரத்தில் வசதி படைத்தவர்கள் இந்த கட்சிக்குள்ளே யாரும் இல்லை. தினந்தோறும் என்னைப் பார்க்க வரும் பார்வையாளர்களில் 90% பேர் ஆக்கப்பூர்வமான செய்திகளை சொல்பவர்கள் அல்ல; பாதிக்கப்பட்டவர்களின் பாதிப்புகளை சொல்பவர்கள் தான். அவ்வளவு வலிகளை சுமந்துவரும் மக்களை வழிநடத்தி, அதே நேரத்தில் இந்தக் கட்சியை பொது நீரோட்டத்திலும் அரசியல் செய்வது அவ்வளவு எளிதல்ல.
image
இந்த கட்சியை வழி நடத்துவதில் திருமாவளவன் என்றைக்கும் உங்கள் நம்பிக்கை்குரியவனாக இருப்பான். இந்து சமூகம் பாகுபாடுகளால் நிறைந்தது, ஆதிக்கம் போன்ற கோட்பாடுகளால் இந்த சமூகம், சாதிய, மத, வர்க்க, ஏகாதிபத்திய முரண்பாடுகளால் இந்த மண் புரையோடி கிடக்கிறது. அது ஒவ்வொரு வீடுகளிலும் வெளிப்படும். ஒவ்வொரு கட்சிகளிலும் வெளிப்படும். சாதி ஆதிக்கம் எப்படி சமூகத்தில் வெளிப்படுகிறதோ, அதேபோன்று பாலின ஆதிக்கம், ஆண் ஆதிக்கமும் இந்த சமூகத்தில் வெளிப்படுகிறது.
கட்சியில் ஒரு லட்சம் பேர் ஆண்கள் இருந்து, 100 பேர் மட்டும் பெண்களாக இருந்தால் இந்த ஆதிக்கம் இயல்பாக வெளிப்படுகிறது. இதனை ஒழிக்க ஆண்களுக்கு இணையாக பெண்களும் அரசியலில் பங்கேற்க வேண்டும். அரசியலில் பங்கேற்கும் பெண்களைப் பற்றி இழிவாக மற்ற பெண்களே தான் பேசுவார்கள். ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் அரசியலில் பங்கேற்றால் பெண்களைப் பற்றி இழிவாக யாரும் பேச மாட்டார்கள்.
நற்சோனை தன்னுடைய களப்பணியில் ஏற்பட்ட கசப்பை, பாதிப்பை உணர்ச்சி வசப்படாமல் இங்கே பேசினார். இதுபோன்ற முரண்பாடுகள் உரையாடல்களுக்கு வரும்போது தான் அதற்கு தீர்வுகாண முடியும். அவர் பேசியதை நான் வரவேற்று பாராட்டுகிறேன். தொடர்ந்து போராடுவதன் மூலம்தான் இந்த அவதூறுகளையும் அவமானங்களையும் வென்றெடுக்க முடியும். நேர்மை தனத்தோடு நாம் களத்தில் நிற்கிறோம் என்று தொடர்ந்து பயணிக்க வேண்டும்.
இந்துத்துவா என்ற சொல்லுக்கு மாற்றாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அரசியலில் நடைமுறைக்கு கொண்டு வந்த சொல் சனாதனம். இந்துத்துவா என்பது இந்துயிசம் அல்ல; இந்துத்துவா என்பது பாஜக, ஆர்எஸ்எஸ், சங்பரிவாரின் கும்பலின் அரசியல். சங்பரிவாரின் முகமூடி அரசியல் தான் இந்துத்துவா. ஆனால் இந்துத்துவத்தில் இருக்கிற பாகுபாடுகளை ஒருபோதும் அவர்கள் பேசமாட்டார்கள். ஆண் பெண் பாகுபாடு, சமூகத்தில் நடைபெறுகின்ற ஆணவக் கொலைகள் பற்றி பேசமாட்டார்கள். இப்படியான முகமூடி அரசியலை தான் செய்கிறார்கள்.
image
இந்துச் சமூகம் என்பது பெண் ஒடுக்குமுறையின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு கல்வியை தர வேண்டும். சமநீதியை தர வேண்டும் என்று சட்ட மசோதாவை உருவாக்கியது அம்பேத்கர். இந்துக்கள் என்றால் இவர்கள் அனைவரின் சடங்குகளும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஆனால் ஒவ்வொன்றும் ஏன் மாறுபடுகிறது? சனாதனத்தை எதிர்த்து வெகுண்டு எழுந்து இந்த மண்ணில் போராட வேண்டுமானால் பார்ப்பன சமூகத்து பெண்கள் உட்பட முதலில் பெண்கள்தான் போராட வீதிக்கு வர வேண்டும்.
ஒரே ஒரு பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் காரன் வெளியில் வந்து மனுஸ்மிருதி எங்கள் கொள்கை இல்லை என்று சொல்ல முடியுமா? சனாதனத்திற்கு ஒரே மாற்று அம்பேத்கர்ரியம் தான். கொள்கை பகைவர்களை இன்று நிலை குலைய வைத்திருக்கிறோம். பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் கொள்கைகளை உள்ளத்தில் ஏந்தி நமது கொள்கை பயணத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்’’ என்று பேசினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.