புதுடில்லி :’கத்தாரில் நடந்து வரும் உலகக் கோப்பை கால்பந்தாட்ட துவக்க விழாவில் பங்கேற்க, இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான மதபோதகர் ஜாகிர் நாயக்குக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கவில்லை’ என, கத்தார் அரசு தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த மதபோதகரான ஜாகிர் நாயக், ‘பீஸ் டிவி’ மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக மத வெறுப்புணர்வு பிரசாரம் செய்து வந்தார்.
இத்துடன், முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாத செயல்களுக்கு துாண்டியது உள்ளிட்ட காரணங்களால், இவரது இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு 2016ல் மத்திய அரசு தடை விதித்தது.
சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட இந்த தடை, 2021ல் மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்தியா வில் இருந்து தப்பி சென்ற ஜாகிர் நாயக் தற்போது தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவில் அரசு ஆதரவுடன் வசித்து வருகிறார். அவரை நாடு கடத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், மத்திய கிழக்கு நாடான கத்தார் தலைநகர் தோஹாவில் உலகப் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் கடந்த 21ல் துவங்கின. துவக்க விழாவில் ஜாகிர் நாயக் பங்கேற்றார். இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
‘கத்தாரின் இந்த செயலால், உலக கோப்பை போட்டியை காண, இந்திய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கத்தார் செல்லஇருந்ததை ரத்து செய்ய வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுஉள்ளது’ என அறிக்கை வெளியிடப்பட்டது.
இதற்கு கத்தார் அளித்து உள்ள பதில் அறிக்கை:
உலகக் கோப்பை போட்டியின் துவக்க விழாவில் பங்கேற்க, ஜாகிர் நாயக்குக்கு அரசு சார்பில் அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் இந்தியா – கத்தார் நல்லுறவை சீர்குலைக்கும் நோக்கத்தில் சில மூன்றாம் நாடுகள் செயல்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement