அகமதாபாத்: தேர்தல் ஆதாயத்துக்காக தனது பேச்சை பாஜக தவறாகப் பயன்படுத்துவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பாக குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மல்லிகார்ஜுன கார்கே, உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என எந்த தேர்தலாக இருந்தாலும் அனைத்திலும் பிரதமர் மோடி நீண்ட நெடிய பிரச்சாரம் மேற்கொள்வதாகக் குறிப்பிட்டார். எங்கு சென்றாலும், தனது முகத்தைப் பார்த்து வாக்களிக்குமாறு அவர் கோருவதை சுட்டிக்காட்டிய மல்லிகார்ஜுன கார்கே, அவருக்கு என்ன ராவணனைப் போல 100 முகங்களா இருக்கின்றன என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. பிரதமர் நரேந்திர மோடியை, மல்லிகார்ஜுன கார்கே ராவணன் என கூறுவதாகவும், இது ஒவ்வொரு குஜராத்தியையும் அவமதிக்கும் செயல் என்றும் பாஜக கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, மல்லிகார்ஜுன கார்கேயின் பேச்சை சுட்டிக்காட்டி, தன்னை யார் கடுமையாக விமர்சிப்பது என்பதில் காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் போட்டி நிலவுவதாகக் குறிப்பிட்டார். தன்னை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் கட்சிக்கு குஜராத் மக்கள் உரிய பாடம் புகட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முதல்முறையாக செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ‘தேர்தல் ஆதாயத்துக்காக எனது பேச்சை பாஜக தவறாக பயன்படுத்துகிறது. அரசியல் என்பது தனி நபர் குறித்தது அல்ல. அது கெள்கைகள் தொடர்பானது. பாஜக மற்றும் பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சார முறையில் ஜனநாயக விழுமியங்கள் இல்லை. அவர்களின் பிரச்சாரம் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட நபரை மையப்படுத்தியதாகவே இருக்கிறது. அந்த ஒரு குறிப்பிட்ட நபர்தான் அனைத்தும் என்பதாக அவர்களின் அரசியல் உள்ளது. இதற்கு பல்வேறு உதாரணங்களை என்னால் குறிப்பிட முடியும். அவர்கள் எனது பேச்சை தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.
வளர்ச்சி, பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, ஏழ்மை என பல்வேறு பிரச்சினைகள் குஜராத்தில் உள்ளன. 27 ஆண்டுகளாக குஜராத்தை ஆட்சி செய்கிறது பாஜக. இருந்தும் இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை. இதைத்தான் நாங்கள் குறிப்பிடுகிறோம்.
குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி மாநகரங்களில் மட்டுமே தேர்தல் பிரச்சாரம் செய்கிறது. காங்கிரசின் ஓட்டுக்களை பிரிப்பதற்காகவே அந்த கட்சி களம் இறக்கப்பட்டுள்ளது. தங்களின் எஜமானர்கள் சொல்வதற்கு கீழ்படிந்து அவர்கள் இந்த தேர்தலை எதிர்கொள்கிறார்கள். பாஜகதான் அவர்களை இயக்குகிறது என நான் சொல்லவில்லை. ஆனால், ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடு அப்படித்தான் இருக்கிறது.
குஜராத்தில் எங்கள் வாக்காளர்கள் அமைதியாக இருக்கிறார்கள். ஆளும் கட்சி மீதான அச்சமே இதற்குக் காரணம். ஆனால், தேர்தல் தினத்தன்று அவர்கள் எங்களுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள். குஜராத்தில் பாஜக உண்மையில் மக்கள் சேவை செய்திருந்தால், இத்தனை அளவுக்கு தீவிர பிரச்சாரம் செய்திருக்கத் தேவையில்லை. இதில் இருந்தே பாஜக மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்” என்று அவர் கூறினார்.