புதுடில்லி,:விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த, சங்கர் மிஸ்ரா என்ற தொழிலதிபரை, கர்நாடக மாநிலம் பெங்களூரில், புதுடில்லி போலீசார் நேற்று கைது செய்தனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து புதுடில்லிக்கு டாடா குழுமத்தின், ‘ஏர் இந்தியா’ விமானம் கடந்த நவ., 26ல் இயக்கப்பட்டது.
விமானத்தின், ‘பிசினஸ்கிளாஸ்’ பிரிவில் பயணம் செய்த ஆண் ஒருவர்மதுபோதையில் எழுந்து சென்று, 70 வயது பெண் பயணி மீது சிறுநீர் கழித்தார்.
இந்த சம்பவம் பயணியர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் சமீபத்தில் தெரிய வந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் புதுடில்லி போலீசில் புகார் கொடுத்தார்.
‘பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், சிறுநீர் கழித்த நபருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதை அடுத்து போலீசில் புகார் அளிக்கவில்லை’ என, ஏர் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தன்னை கட்டாயப்படுத்தி, அந்த நபருடன் விமான ஊழியர்கள் பேச வைத்து, வற்புறுத்தி சமரசம் செய்தனர் என அந்தப் பெண் புகாரில் கூறியுள்ளார்.
பெண் பயணி மீது சிறு நீர் கழித்தவர், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சங்கர் மிஸ்ரா, 34, என்பது தெரியவந்தது.
அவரை கைது செய்ய மும்பை போலீசார் மற்றும்புதுடில்லி போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களில், ‘லுக் அவுட் நோட்டீஸ்’ பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரின் சஞ்சய் நகரில் உள்ள தன் சகோதரியின் வீட்டுக்கு சங்கர் மிஸ்ரா தப்பிச் சென்றதாக தகவல் கிடைத்தது.
பெங்களூரு போலீசார் உதவியுடன், அவரை புதுடில்லி போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் புதுடில்லிக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
அவரை இரண்டு வாரம் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி, ஏர் இந்தியா விமானத்தின் விமானி மற்றும் ஊழியர்களுக்கும், புதுடில்லி போலீசார் ‘சம்மன்’ அனுப்பியுள்ளனர்.
மன்னிப்பு கேட்டார் அதிகாரி!
இந்த சம்பவம் குறித்து, ஏர் இந்தியா தலைமை செயல் அதிகாரி கேம்பெல் வில்சன் நேற்று கூறியதாவது:ஏர் இந்தியா விமானத்தில் நடந்த இந்த சம்பவம் கண்டிக்கக் கூடியது. விமான பயணியரின் பாதுகாப்பு மற்றும் சுகமான பயணத்தை உறுதி செய்வோம்.நியூயார்க் – புதுடில்லி விமானத்தில் நடந்த சம்பவத்தை விமான ஊழியர்கள் முறையாக கையாளவில்லை. இந்த சம்பவத்துக்காக முழுமையாக மன்னிப்பு கேட்கிறோம்.இந்த விவகாரம் தொடர்பாக அந்த விமானத்தின் விமானி மற்றும் நான்கு ஊழியர்கள், விமானப் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, விமானத்தில் மதுபானம் வழங்குவது தொடர்பாகவும் ஆய்வு செய்ய உள்ளோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்