திருப்பதி: ‘4 ஆண்டுகால ஜெகன்மோகன் ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை’ என்று தெலுங்கு தேசம் கட்சி இளைஞர் அணி விமர்சித்துள்ளது.திருப்பதியில் தெலுங்கு தேசம் கட்சி இளைஞர் அணி மாநில செயலாளர் ரவி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் இளைஞர்களுக்கு வேலை வழங்கவில்லை. தேர்தலுக்கு முன் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வேலையில்லாதோருக்கான வேலை காலண்டரை வெளியிடுவோம் என்று கூறி இதுவரை அதனை செயல்படுத்தவில்லை. ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சி இளைஞர்களுக்கு தூக்குமேடையாகிவிட்டது.
மாணவர்கள், இளைஞர்கள், வேலையில்லாதவர்கள் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வர பாடுபட்டனர். இன்று ஜெகன் முதலமைச்சரான பிறகு வேலை இல்லாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். வேலையில்லாதவர்கள், முதலமைச்சரை முற்றுகையிட தயங்க மாட்டோம் என எச்சரித்துள்ளனர்.
மாநில அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சியினர் மீது கைது, தடுப்புக்காவல், அட்டூழியங்கள், தாக்குதல்களுக்கு பயப்பட மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். வேலைவாய்ப்பு வழங்காவிட்டால் இளைஞர்கள் தூக்கு மாட்டிக்கொள்ள நிலை ஏற்படும் என்று எச்சரிக்கை செய்துள்ளனர். எனவே, தேர்தலுக்கு முன் அறிவித்த வேலையில்லாதோருக்கான வேலை காலண்டரை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட வேண்டும். இவ்வாறு ரவி கூறினார்.