டெல்லி: கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு டெல்லியில் கடும் குளிர் வாட்டி வருகிறது. ஜனவரி 26ஆம் குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கான ஒத்திகை அணிவகுப்பை இராணுவ வீரர்கள் கடும் குளிரிலும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் குளிர்காலங்களில் அதிகப்படியான குளிர் பதிவாகும் நகரங்களில் ஒன்றாக தலைநகர் டெல்லி இருந்து வருகிறது. இதனிடையே டெல்லியில் கடந்த சில நாட்களாகவே வெப்ப அளவு குறைந்து கடும் குளிர் வாட்டி வருகிறது. இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வகையில் குளிர் 1.1 டிகிரி செல்ஸியஸ் ஆக சரிந்துள்ளது. இதனால் நகர் முழுவதும் பனிப்போர்வைக்குள் மூடியதுபோல் உள்ளது.
இதன் காரணமாக மக்களின் இயல்வு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் சாலை போக்குவரத்து, விமானசேவை, ரயில் போக்குவரத்து ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு இந்தியாவையும் அதை ஒட்டிய மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளையும் அடர்ந்த மூடுபனி சூழ்ந்துள்ளதால் போக்குவரத்துகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வருகிற ஜனவரி 26ஆம் தேதி நாட்டின் 74வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி டெல்லியில் நடைபெறுவது வழக்கம். நேற்று டெல்லியில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். கொட்டும் பனியிலும் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகையை மேற்கொண்டனர்.