பொங்கலுக்கு SBI கொடுத்த ஷாக்… இந்த விடுமுறையில் இப்படி ஒரு சிக்கல்!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி என்றால் அனைவருக்கும் முதலில் தோன்றுவது பாரத் ஸ்டேட் வங்கி (SBI). இதில் ஏற்படும் காலி பணியிடங்களுக்கு அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாரத் ஸ்டேட் வங்கியில் கிளார்க் பணியிடங்களுக்கு தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியானது. மொத்தப் பணியிடங்கள் 5,008. இதையொட்டி நடத்தப்பட்ட முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தகட்டமாக முதன்மை தேர்விற்கு தயாராகி வந்தனர்.

கிளார்க் முதன்மை தேர்வு

இந்நிலையில் தான் ஜனவரி 15, 2023 அன்று பாரத் ஸ்டேட் வங்கி கிளார்க் முதன்மை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தமிழர்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இங்கு தான் சிக்கலே ஆரம்பிக்கிறது. ஜனவரி 15ஆம் தேதி என்பது தமிழர்களை பொறுத்தவரை தைப் பொங்கல் திருநாள். இது அரசு விடுமுறை ஆகும்.

பொங்கல் விடுமுறையில் சிக்கல்

எனவே பலரும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி பண்டிகையை கொண்டாடி மகிழ்வர். அதுமட்டுமின்றி பொங்கல் என்றாலே தொடர்ந்து 3 நாட்கள் கொண்டாடப்படும் திருவிழா. தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், உழவர் திருநாள். எனவே ஊருக்கு கிளம்பி சென்றுவிட்டால் 3 அல்லது 4 நாட்களுக்கு கொண்டாட்ட மனநிலையில் தான் இருப்பர்.

அரசியல் கட்சிகள் எதிர்ப்பு

அப்படியிருக்கும் போது பொங்கல் நாளில் போட்டித் தேர்வு வைத்தால் எப்படி சரியாக இருக்கும் என தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சிகள் பலவும் எதிர்க்குரல் எழுப்பின. மதுரை எம்.பி சு.வெங்கடேசன், திமுக எம்.பி கனிமொழி, தென் சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். வேறொரு தேதியில் பாரத் ஸ்டேட் வங்கி கிளார்க் தேர்வை மாற்றி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை

குறிப்பாக சு.வெங்கடேசன் 12 மணி நேர காத்திருப்பு போராட்டத்தை நடத்தினார். இந்த சூழலில் தமிழக முதல்வர்
மு.க.ஸ்டாலின்
தலையிட்டு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் பேசினார். அதற்கு இதுபற்றி ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனப் பதிலளிக்கப்பட்டது. ஆனால் இனி தேர்வு தேதியை மாற்ற முடியாது என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் பதில் அளித்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழர் விரோத போக்கிற்கு கண்டனம்

20 நாட்களுக்கு முன்பே தெரிந்திருந்தும் ஏன் வஞ்சிக்கும் செயலை மத்திய அரசு செய்கிறது. எங்கள் பொங்கல் திருநாளை தேர்வு நாளாக்கி கொண்டாட்டத்தை பதற்றமாக மாற்றிவிட்டனர். இந்நிலையில் தமிழர் விரோத போக்கை கடைபிடித்து வரும் பாஜக அரசிற்கு தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வங்கியில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாவிட்டால் அபராதம் போட்டு பல நூறு கோடி லாபம் பார்த்து வருவதாக பாரத் ஸ்டேட் வங்கி மீது குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்த சூழலில் கொண்டாட்ட மனநிலையையும் இப்படி கெடுத்து விட்டார்களே? என்ற எண்ண வைப்பதாக பல்வேறு தரப்பினரும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.