ஆன்-லைனில் ரூ.3.29 லட்சம் சுருட்டிய ஹரியானா மாநிலத்தவர் இருவர் கைது| Online Rs. 3.29 lakh from Haryana arrested two people

ஆன்-லைனில் ரூ. 3.29 லட்சம் சுருட்டிய ஹரியானா மாநிலத்தவர் இருவர் கைது

சென்னை : சென்னை, வேளச்சேரி பிரதான சாலையை சேர்ந்தவர் அனந்த ராமகிருஷ்ணன், 62.

நவ., மாதம் இவரது மொபைல் போன் எண்ணிற்க்கு மின்வாரிய கட்டணம் செலுத்தவில்லை என்ற குறுஞ்செய்தி வந்தது.

அந்த
எண்ணை தொடர்பு கொண்டு பணம் செலுத்த, ஓ.டி.பி., எண்ணை பகிர்ந்துள்ளார்.
அதன் வாயிலாக, 1.99 லட்சம் ரூபாய், ‘ஆன்-லைன்’ வாயிலாக திருடப்பட்டது.

நங்கநல்லுார்,
38வது தெருவைச் சேர்ந்த பத்மா என்பவரிடம், கடந்த அக்., மாதம், ‘பான்
கார்டு’ அப்டேட் செய்வதாக ஓ.டி.பி., பெற்று, 1.30 லட்சம் ரூபாய்,
‘ஆன்-லைன்’ வழியாக திருடப்பட்டது.

இது குறித்த புகாரின் படி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

இதில்,
குற்ற செயலில் ஈடுபட்டது ஹரியானா மாநிலம், குருகிராம் மாவட்டம், ஓம்
நகரைச் சேர்ந்த மஞ்சித்சிங், 49, நாராயணசிங், 44 என்பது தெரியவந்தது.

இதையடுத்து, ஹரியானா விரைந்த தனிப்படையினர் இருவரையும் பிடித்து, குருகிராம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சென்னை அழைத்து வந்தனர்.

பின், இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவு படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பைக்கில் சென்றவரிடம் மொபைல் போனை பறித்துச் சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் அடுத்த சிந்தாமணியைச் சேர்ந்தவர் ராஜ்காந்த் மகன் குஜ்ராகாந்த், 25; இவர், நேற்று முன்தினம் மாலை சிந்தாமணியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தனது சித்தப்பாவுடன் பைக்கில் சென்றார்.

அய்யூர் அகரம் மேம்பாலம் அருகே பைக்கில், பின் தொடர்ந்து வந்த 2 பேர், குஜ்ராகாந்த் பைக்கை மறித்து அவரிடமிருந்து மொபைல் போன் மற்றும் பணத்தைப் பறித்துச் சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதில், விழுப்புரம் அடுத்த தளவானுார் காலனியைச் சேர்ந்த வீரப்பன் மகன் பாரதிதாசன், 20; தனுசு மகன் விக்ரம், 19; ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. உடன் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மொபல் போன் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய பல்சர் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

மூதாட்டியிடம் 10 சவரன் பறிப்பு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், வேளிங்கபட்டரை பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி குணசுந்தரி, 60. நேற்று மதியம், காந்தி நகர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டு குழந்தை பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

திரும்பி சாலையில் நடந்து வரும் போது, பின்னால் ‘டூ – வீலரி’ல் வந்த மர்ம நபர், அவர் அணிந்திருந்த தாலி செயினை பறித்து சென்றார்.

அப்போது, மூதாட்டி நிலை தடுமாறி விழுந்தார். அந்த தாலி செயினுடன், மூன்று சவரன் சேர்த்து 10 சவரன் நகை என கூறப்படுகிறது.

செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

ரவுடியிசத்தில் ஈடுபட்ட மேலும் இருவர் கைது

கொடுங்கையூர் : வியாசர்பாடி, பி.வி.காலனி 1வது தெரு முதல் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, மூலக்கடை வரை, கடந்த 10ம் தேதி நள்ளிரவு, மாமூல் கிடைக்காத ஆத்திரத்தில், முகமூடி மற்றும் ‘ஹெல்மெட்’ அணிந்து வந்த 10 பேர் கொண்ட கும்பல், ஆறு பேரை சரமாரியாக வெட்டியது.

latest tamil news

அதுமட்டுமல்லாமல், இரண்டு கார், தலா 4 ‘டாடா ஏஸ்’ வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களை அடித்து நொறுக்கினர். மேலும் ஜெராக்ஸ் கடை, இரு மளிகைக் கடைகளை சூறையாடினர்.

இது குறித்து எம்.கே.பி.நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன் தலைமையில் எம்.கே.பி.நகர், கொடுங்கையூர் போலீசார் விசாரித்தனர்.

இதில் ரவுடிகள் நான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த வியாசர்பாடி, பி.வி.காலனியைச் சேர்ந்த ஸ்ரீதர், 18 மற்றும் 17 வயது சிறுவனை, கொடுங்கையூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.

சிறுவனை சீர்திருத்த பள்ளியிலும், ஸ்ரீதரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலும் அடைத்தனர்.

12 பேருக்கு ‘குண்டாஸ்’

சென்னை : சென்னை, கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் முரளி, 32, கோவளத்தைச் சேர்ந்தவர் தமிழரசன், 29, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் மணிகண்டன், 26, திருவொற்றியூரைச் சேர்ந்தவர் கவியரசு, 25. இவர்கள் உள்ளிட்ட 12 பேர், தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.

போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி, 12 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இந்தாண்டில் இதுவரை 23 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிணை பத்திரத்தை மீறி, குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஐந்து பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வீடு புகுந்து திருடிய இரு சிறுவர்கள் கைது

புதுச்சேரி : மேட்டுப்பாளையத்தில் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் 4 பைக் திருடிய இரு சிறுவர்களை போலீசார் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

புதுச்சேரி தர்மாபுரி, புரட்சி தலைவி நகர், 3வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன், 40; எலக்ட்ரீஷியன். முத்திரையர்பாளையம் ஆட்டுக்காரன் ஓடை அருகே புதிதாக வீடு கட்டி கிரகபிரவேசம் செய்தார். கட்டுமான பணி முடியாததால் குடியேறவில்லை.

latest tamil news

கடந்த 12ம் தேதி அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்து குத்துவிளக்கு, எலக்ட்ரிக்கல் பொருட்களை திருடிச் சென்றனர். புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் 17 மற்றும் 16 வயதுடைய இரு சிறுவர்கள் வீடு புகுந்து திருடியது தெரிய வந்தது. அதன் பேரில் இரு சிறுவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் இருவரும் சேர்ந்து மேட்டுப்பாளையம், முதலியார்பேட்டை, தவளக்குப்பம், வில்லியனுார் பகுதியில் 4 பைக் திருடியதும் தெரிய வந்தது. பிடிபட்ட இரு சிறுவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

ரவுடி கைதியின் ‘சிடி’ ரகசியத்தால் அரசியல்வாதிகள்… கலக்கம்!

பெங்களூரு : ரவுடி ‘சான்ட்ரோ’ ரவியிடம் சில ரகசிய ‘சிடி’க்கள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, எந்த நேரமும் ‘குட்டு’ வெளியாகும் என்பதால், அரசியல்வாதிகள் பீதி அடைந்துள்ளனர். விசாரணையின்போது அவர் ‘உங்கள் ஜாதகமே என் கையில்’ என போலீசாரை மிரட்டி வருகிறார். அவரிடம் ‘சிடி’க்கள் இருப்பது உண்மைதானா என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.

மாண்டியாவை சேர்ந்தவர் மஞ்சுநாத் என்ற சான்ட்ரோ ரவி, 50. இவர் மைசூரில் நிதி நிறுவனம் நடத்தியதோடு, வேலை தருவதாக கூறி பெண்களை பலாத்காரம் செய்தார்.

‘ஹை டெக்’ விபசாரம்

அதோடு அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு இளம்பெண்களை சப்ளை செய்யும், ‘ஹை டெக்’ விபசாரம் நடத்தி வந்தார். தன் செல்வாக்கை பயன்படுத்தி அதிகாரிகளை இடமாற்றமும் செய்து வந்தார்.

அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் நெருக்கம் காட்டி வந்ததால், இவரது தொழில் வெளியில் தெரியவில்லை. பெரிய ரவுடி போலவே செயல்பட்டு வந்துள்ளார்.

தன்னை பலாத்காரம் செய்து தான், ரவுடி சான்ட்ரோ ரவி திருமணம் செய்து கொண்டார் என, அவரது இரண்டாவது மனைவி புகார் அளித்தார்.

மேலும், உயிரை கொல்லும் நோயை தனக்கு பரப்பி உள்ளார் என்றும், மைசூரு போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து, இந்த விவகாரம் வெளியில் தெரியவந்தது.

இவரை கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ், ம.ஜ.த., தலைவர்கள் நெருக்கடி அளித்ததால், கர்நாடக அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து, சான்ட்ரோ ரவியை கைது செய்யுமாறு முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார். சான்ட்ரோ ரவியை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

குற்ற வழக்குகள்

இவர்கள் நேற்று முன்தினம் குஜராத்தின் ஆமதாபாதில் இருந்த ரவியை கைது செய்து, பெங்களூருக்கு அழைத்து வந்தனர். அவரது கூட்டாளிகளான நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு, வந்திறங்கிய பின், ஊடகங்களின் கண்களை மறைத்து, பிரதமர் உட்பட, வி.ஐ.பி.,க்கள் செல்லும் கேட் வழியாக, மைசூருக்கு அழைத்து சென்றனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

அவரை வி.ஐ.பி.,க்கள் செல்லும் வழியாக கொண்டு செல்லப்பட்டதற்கு, பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். குற்றவாளியை இப்படி அழைத்து சென்றது சரியா என கேட்டுள்ளனர்.

சான்ட்ரோ ரவி மீது, 1995ம் ஆண்டு முதல் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. மைசூரு மற்றும் பெங்களூரில் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

விரிவான விசாரணை

எனவே, 20 ஆண்டுகளாக, அவர் மீதான அனைத்து வழக்குகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் அவருக்கு உள்ள தொடர்புகள் குறித்தும் விரிவான விசாரணை நடத்துமாறு போலீசாருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

எனவே, சான்ட்ரோ ரவி மீது விரிவான விசாரணை நடத்தி ஆதாரங்களை சேகரிக்க, போலீசார் தயாராகி வருகின்றனர்.

அதே நேரம், கர்நாடக எம்.எல்.ஏ.,க்கள் மும்பை சொகுசு விடுதியில் தங்கி இருந்த போது, இளம்பெண்களுடன் இருந்ததாக கூறப்படும் ‘சிடி’க்களை சான்ட்ரோ ரவியிடம் உள்ளதாக, முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறி உள்ளார்.

இதனால் சில அரசியல்வாதிகள், அதிகாரிகளிடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது. குமாரசாமி சொல்வது போல அவரிடம் ‘சிடி’க்கள் உள்ளது உண்மைதானா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.