சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடந்து வரும், 46வது சென்னை புத்தக கண்காட்சியில், நேற்று மணிமேகலை பிரசுரத்தின் 46 நுால்கள் வெளியிடப்பட்டன.
தினமலர் – வாரமலர் நாளிதழின் நாயகன், அந்துமணியின் கேள்வி – பதில் தொகுப்பு, பல பாகங்களாக வெளிவந்த வண்ணம் உள்ளது. அதில், ‘அந்துமணி பதில்கள் – பாகம் 5’ நுாலை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் வெளியிட, சஞ்சீவி ராஜா சுவாமிகள் பெற்றுக் கொண்டார். ‘தினமலர்’ நாளிதழின் முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி கல்பலதா முன்னிலை வகித்தார்.
தமிழ்வாணனின் ‘சங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல்கள்’ – லேனா தமிழ்வாணன் எழுதிய ‘நல்லுறவே நம் உயர்வு’ – சஞ்சீவி ராஜா சுவாமிகளின், ‘துன்பங்களை தீர்த்திடும் ஜோதிடப் பரிகார வழிபாடுகள்’ – எஸ்.ரஜத் எழுதிய, ‘ஜெயலலிதாவின் மனம் திறந்து சொல்கிறேன்’ உள்ளிட்ட 46 நுால்கள் வெளியிடப்பட்டன.
அவற்றை, உயர் நீதிமன்ற நீதிபதி எம்.நிர்மல்குமார், ‘பபாசி’ தலைவர் வைரவன், இசையமைப்பாளர் கங்கை அமரன், இயக்குனர் கஸ்துாரிராஜா, இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன், பா.ஜ., செயற்குழு உறுப்பினர் மதுவந்தி, நடன இயக்குனர் கே.ஆர்.ஸ்வர்ண லட்சுமி ஆகியோர் வெளியிட்டனர்.
விழாவில், எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சிகளை, மணிமேகலை பிரசுரத்தின் நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன் ஒருங்கிணைத்தார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் பேசியதாவது:
மெல்லத் தமிழ் இனி சாகும் என பாரதி அஞ்சியபோது, அவனே தன்னை தேற்றிக் கொண்டான். அவன் தீர்க்கதரிசி அல்லவா!
தமிழ்வாணன் போன்றவர்கள் இங்கு பிறப்பர். அவர்கள் இறவாத தமிழ் நுால்கள் எல்லாம் பதிப்பிப்பர். இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்வர் என உணர்ந்தார் போலும்.
அதனால்தான், இந்த மொழி சாகாது என்று பாரதி முடித்தான். வள்ளுவனின் வாக்குக்கு ஏற்ப, தமிழ்வாணன் புதல்வர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறு, அவர் பேசினார்.
நீதிபதி எம்.நிர்மல்குமார் பேசியதாவது:
கல்வி, உழைப்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம். அதற்கு நானே உதாரணம். இந்த மேடை, எழுத்தாளர், பதிப்பாளர் மற்றும் வாசிப்பாளர்கள் அடங்கிய ஒரு சங்கமம். இதை வியாபாரமாக அல்லாமல், கடமையாகவே மணிமேகலை பிரசுரத்தினர் செய்கின்றனர்.
கடந்த 1955ல் துவக்கிய மணிமேகலை பிரசுரம், இன்றும் சிறப்பாக செயல்படுகிறது. வியாபாரமாக மட்டுமின்றி, எழுத்தாளர்களுக்கு பயனுள்ளதாகவும், தொண்டாகவும் சில விஷயங்களை செய்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்