ஆமதாபாத் : பிரதமர் கல்வி விவகாரம் பற்றி உயர் நீதிமன்றத்தில் பதிலளித்துள்ள குஜராத் பல்கலைக்கழகம், ‘ஒருவரின் பொறுப்பற்ற குழந்தைதனமான ஆர்வம் பொது நலன் வழக்காக மாற முடியாது’ என தெரிவித்துள்ளது.
புதுடில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடி பெற்ற பட்டங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக மத்திய தகவல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து, இது குறித்த தகவல்களை அவருக்கு அளிக்குமாறு டில்லி மற்றும் குஜராத் பல்கலைக்கழகங்களுக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, குஜராத் பல்கலைக்கழகம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஆமதாபாத் உயர் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் வந்தது. அப்போது, பல்கலைகழகம் தரப்பில் ஆஜரான சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:
பிரதமரின் பட்டங்கள் குறித்த விபரங்கள், ஏற்கனவே பொதுதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதால், இதில் மறைக்க எதுவும் இல்லை. ஆர்.டி.ஐ., ஆர்வலராக இருப்பது இப்போது ஒரு தொழிலாக மாறிவிட்டது. தொடர்பு இல்லாத பலர், பல விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வமாக உள்ளனர். பொறுப்பற்ற, குழந்தைத்தனமான ஆர்வம், பொது நலனாக மாற முடியாது.
ஒருவர் ஆர்வமாக இருப்பதால், மற்றொருவரின் தனிப்பட்ட தகவலை பெற முடியாது. நம்பகமான உறவு காரணமாக, மாணவரின் தகவல்களை மூன்றாம் நபருக்கு வெளியிட பல்கலைகழகம் மறுக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது வாதிட்ட அரவிந்த் கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் பெர்சி கவினா, ”பிரதமரின் பட்டங்கள் குறித்த விபரங்கள் பொது வெளியில் இல்லை,” என தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிரேன் வைஷ்ணவ், மத்திய தகவல் ஆணையம் உத்தரவை எதிர்த்து குஜராத் பல்கலைக்கழகம் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை ஒத்திவைத்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement