வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நியூயார்க்: அமெரிக்காவின் அலாஸ்கா கடற்கரையில் உள்ள வான்வெளியில், அடையாளம் தெரியாத மர்ம பொருள் ஒன்று பறந்து கொண்டிருந்தை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் வான்வெளியில் 60 ஆயிரம் அடி உயரத்தில் மர்ம பலுான் ஒன்று பறப்பதை அமெரிக்க ராணுவம் சமீபத்தில் கண்டறிந்தது. அதை தொடர்ந்து கண்காணித்த நிலையில், அது சீன ராணுவத்தால் உளவு பார்க்க அனுப்பப்பட்ட பலுான் என்பது தெரிய வந்தது.
பின், அமெரிக்க ராணுவ அதிகாரிகள் அது குறித்த தொழில்நுட்ப விபரங்களை அறிந்து கொண்டனர். இந்த பலுான், நிலப்பரப்பில் இருந்து கடல் பகுதிக்குள் நுழைந்தபோது, அமெரிக்க போர் விமானம் வாயிலாக சுட்டு வீழ்த்தப்பட்டது.அமெரிக்காவின் தெற்கு கரோலினா அருகே, அட்லான்டிக் கடலில் விழுந்த அந்த பலுானின் உதிரி பாகங்கள் மற்றும் கருவிகளை மீட்கும் பணி நடந்தது.
இந்நிலையில் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தின் வான்பரப்பில் மர்ம பொருள், ஒன்று 40 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. இந்த மர்ம பொருள் கண்காணிப்பு ரேடாரில் தென்பட்ட நிலையில், அமெரிக்க ராணுவம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. அந்த மர்ம பொருள் விமானங்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும் வகையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அதை சுட்டு வீழ்த்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார். இதையடுத்து அந்த மர்ம பொருளை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
மர்ம பொருளின் சிதைந்த பாகங்கள் அலாஸ்காவின் உறைந்த ஆற்றுப்படுகையில் விழுந்துள்ளது. அந்த மர்ம பொருளின் பாகங்களை கண்டுபிடித்து அமெரிக்கா விசாரணை நடத்தி வருகிறது.

இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில்,
அந்த பொருள் என்னவென்றே தெரியவில்லை. அலாஸ்கா மீது பறந்த பொருளானது 40 ஆயிரம் அடி உயரத்தில் காணப்பட்டது. பயணிகள் விமானங்களுக்கு அது அச்சுறுத்தலாக மாற வாய்ப்பிருப்பதாக கண்டறியப்பட்டது. அதனால், அந்த மர்ம பொருளை சுட்டு வீழ்த்தப்பட்டது.
அந்த பொருள் யாருக்கு சொந்தமானது என்பது தெரியவில்லை, ஆனால், கடந்த வாரம் அமெரிக்க வான்பரப்பில் காணப்பட்ட சீன பலூனை விடவும் அளவில் சிறியதாக காணப்பட்டது. சுட்டு வீழ்த்தப்பட்ட உதிரி பாகங்களை ஆய்வுக்கு உட்படுத்தப் போகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement