கர்நாடக வனத்துறையால் சுடப்பட்ட மீனவர்? – அவருக்கு வேட்டையாடுவதுதான் வழக்கமா… போலீசார் கூறுவது என்ன?

சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள கோவிந்தபாடி அரிசிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் காரவடையான் என்கின்ற ராஜா. இவரது நண்பர்கள் இளையபெருமாள், தர்மபுரி மாவட்டம் ஏமனூரை சேர்ந்த ரவி ஆகியோருடன் கடந்த பிப். 14ஆம் தேதி இரவு வனவிலங்குகளை வேட்டையாட கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலை வனப்பகுதிக்குள் ராஜா சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது வேட்டைக்குச் சென்றவர்களுக்கும், கர்நாடக மாநில வனத்துறையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வேட்டைக்குச் சென்றவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இந்த நிலையில், கடந்த 17ஆம் தேதி ராஜாவின் சடலம் ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி வனப்பகுதி அடிப்பாளாறு பகுதியில் தண்ணீரில் மிதந்தது வந்தது. 

இதையடுத்து, ஈரோடு பர்கூர் போலீசார், இதனை இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், நேற்று சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற பிரேத பரிசோதனை முடிவில் ராஜாவின் உடலில் குண்டு எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. குண்டடிப்பட்டதற்கான அடையாளம் ஏதும் இல்லை என தகவல் கசிந்ததால் முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கை வரும் வரை ராஜாவின் உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு கிளம்பிச் சென்றனர்.

இந்த நிலையில், உயிரிழந்த மீனவர் ராஜா குறித்து சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் சிவகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில், “ராஜா குறித்து விசாரணை செய்ததில், ராஜா வனவிலங்குகளை வேட்டையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதே போல், 2014ஆம் ஆண்டு கோவிந்தபடியைச் சேர்ந்த பழனி என்பவருடன் கர்நாடக மாநிலம் கோபிநத்தம் வனப்பகுதிக்கு வேட்டைக்குச் சென்றபோது வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் பழனி உயிரிழந்துவிட்டார்.

அப்போது, ராஜா தப்பித்து வந்து ஊர் மக்களிடம் தகவல் தெரிவித்ததால், பொதுமக்கள் கோபம் அடைந்த கர்நாடக வனத்துறையினரின் சோதனைச் சாவடியை சேதப்படுத்தினர். இச்சம்பவம் குறித்து மாதேஸ்வரன் மலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ராஜா தொடர்ந்து இதேபோல் வனவிலங்கு வேட்டையாடும் குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பாக ஈரோடு சென்னம்பட்டி வனச்சரகத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இவரது நடவடிக்கைகள் சரியில்லாததால் அரிசி பாளையம் கிராமத்தில் இவர் மீது வனவிலங்கு வேட்டையாடும் குற்றங்களில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தி தீர்மானம் போடப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்தது. அவ்வாறு இருந்தும் மீண்டும் வனப்பகுதிக்கு சென்றதால் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார். 

உயிரிழந்த ராஜாவின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், கர்நாடக வனத்துறையினருக்கு தனது கண்டனங்களையும் தெரிவித்திருந்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.