டெல்லி:
டெல்லியில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, நீங்கள் ஏன் பதவி விலகக் கூடாது என நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்வி எடப்பாடி பழனிசாமியை கோபம் அடையச் செய்தது.
திமுக என்ன செஞ்சாங்க? இபிஎஸ் ஆவேசம்!
அதிமுக பொதுச்செயலாளர்
நேற்று டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அவருடன் முன்னாள் அமைச்சர் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி. சண்முகம் உள்ளிட்டோரும் சென்றிருந்தனர். இந்த சந்திப்பின் போது பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தனர்.
அதிமுக – பாஜக இடையேயான கூட்டணியில் விரிசல் அதிகமாகிக் கொண்டிருந்த சூழலில், இந்த சந்திப்பு நடந்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பை தொடர்ந்து, இன்று காலை செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது, பாஜக – அதிமுக உறவு, அண்ணாமலை உடனான பிரச்சினை, ஓபிஎஸ் திருச்சி மாநாடு என பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
அந்த சமயத்தில் நிருபர் ஒருவர், “நீங்கள் அதிமுகவுக்கு தலைமை ஏற்றது முதலாக அனைத்து தேர்தல்களிலும் கட்சி தோல்வியை சந்தித்து வருகிறது. அப்படியென்றால் உங்கள் தலைமையை மக்கள் நிராகரிக்கிறார்கள் என்றுதானே அர்த்தம். இந்த தோல்விகளுக்கு பொறுப்பேற்று நீங்கள் ஏன் உங்கள் பதவியை ராஜினாமா செய்யக்கூடாது.. கட்சியில் அனுபவம் வாய்ந்த பலர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவருக்கு அந்த பதவியை கொடுக்கலாமே..” என கேள்வி எழுப்பினார்.
இந்தக் கேள்வியை எதிர்பார்க்காத எடபபாடி பழனிசாமி சட்டென டென்ஷன் ஆனார். பின்னர் சுதாரித்துக் கொண்ட அவர் லேசாக சிரித்துவிட்டு பதிலளித்தார். “ஒரு சாதாரண விவசாயி இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறார் என பாராட்ட உங்களுக்கு மனம் இல்லை. நான் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். இந்த அளவுக்கு வந்ததே பெரிய விஷயம். இவ்வளவு பெரிய கட்சியை வழிநடத்தி சிறப்பான ஆட்சியை கொடுத்ததே பெரிது. கட்சியை எல்லா பக்கத்திலும் இருந்தும் ஸ்டாலின் உடைத்துக் கொண்டிருக்கிறார்.
இதையெல்லாம் சமாளித்து கட்சியை கட்டுக்கோப்பாக நான் நடத்திக் கொண்டிருக்கிறேன். இவ்வளவு ஏன்.. நான் முதல்வர் பதவியில் அமர்ந்த சமயத்தில் வந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் திமுகவினர் எத்தனை அராஜகத்தில் ஈடுபட்டனர். இத்தனை குடைச்சல்களை தாண்டி 4 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை கொடுத்திருக்கிறேன். எங்கு சென்றாலும் அதிமுக ஆட்சி சிறப்பாக இருந்தது என்றுதான் மக்கள் சொல்கிறார்கள். இதுவே எனக்கு வெற்றி” என எடப்பாடி பழனிசாமி கூறினார்.