சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் மார்க் ஆண்டனி படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
செல்லமே படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான விஷால்.தயாரிப்பாளரின் குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வந்தாலும் தனக்கென திறமையை வளர்த்துக்கொண்டதால் சினிமாவில் தனித்து ஜொலிக்கிறார. செல்லமே படம் ஓரளவு வெற்றி பெற்று படவாய்ப்புகள் அமைந்தன.
சண்டக்கோழி: அந்த சமயத்தில் விஷாலுக்கு சண்டக்கோழி படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. அந்தப் படத்தில் விஜய்தான் முதலில் நடிக்கவிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தில் விஷாலின் நடிப்பை பார்த்த பலரும் மிகப்பெரிய கமர்ஷியல் ஹீரொவோக வலம் வருவார் என ஆரூடம் கூறினார்.. அதேபோல் அவர் நடித்த தாமிரபரணி, திமிரு உள்ளிட்ட படங்களும் ஹிட்டடித்தன.
ஹிட்டுக்காக ஏங்கும் நடிகர் விஷால்: ஆனால் சமீபமாக ஹிட் படங்கள் கொடுப்பதற்கு விஷால் ஏங்கிக்கொண்டிருக்கிறார். அவர் நடிக்கும் எந்தப் படமும் ரசிகர்களை கவராததால் உடனடியாக ஹிட் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக உழைத்துவருகிறார் அவர். சமீபத்தில் நடித்த லத்தி படமும் அவருக்கு மோசமான தோல்வியையே கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி: இந்நிலையில் அவர் ஆதிக் ரவிச்சதிரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் அவருடன் எஸ்.ஜே.சூர்யா, ரிது வர்மா, சுனில் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இது அவருக்கு 33ஆவது படமாகும். இப்படத்தில் செல்வராகவனும் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் மூலமாவது விஷாலுக்கு வெற்றி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது.
மார்க் ஆண்டனி டீசர்: இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது. டீசரின் மூலம் மார்க் ஆண்டனி படமானது டைம் ட்ராவலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. மேலும் விஷால் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் என்பதும் தெரியவந்திருக்கிறது.
ரெட்ரோ கால கதைக்களம் போல் தெரியும் மார்க் ஆண்டனியில் ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என டீசரை பார்த்த ரசிகர்கள் தெரிவித்துவருகின்றனர். அதுமட்டுமின்றி செல்வராகவனும், எஸ்.ஜே.சூர்யாவும் நடிப்பில் அதகளம் செய்திருக்கிறார்கள் என்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தெரிவித்துவருகின்றனர்.

விஜய்யை சந்தித்த விஷால்: இதற்கிடையே விஷால், ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் இன்று காலை நடிகர் விஜய்யை சந்தித்து பேசினர். அப்போது மார்க் ஆண்டனி டீசரையும் அவரிடம் காண்பித்து வாழ்த்தையும் பாராட்டையும் பெற்றனர்.
இந்த சந்திப்பின்போது, உங்களுக்காக இரண்டு கதைகளை தயார் செய்திருக்கிறேன் என விஷால் கூறியதாகவும், அதற்கு நீ வா நண்பா நான் இருக்கேன். சேர்ந்து பயணிப்போம் என விஜய் கூறியதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஷால் மார்க் ஆண்டனி படத்துக்கு பிறகு இயக்குநர் ஹரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாள்களுக்கு முன்பு வெளியானது.